Paristamil Navigation Paristamil advert login

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை தேவை தே.ஜ., கூட்டணி

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை தேவை தே.ஜ., கூட்டணி

20 கார்த்திகை 2024 புதன் 03:49 | பார்வைகள் : 885


வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கூகி கிளர்ச்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் மணிப்பூரில், 2023 மே மாதம், மெய்டி - கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், தற்போது மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

மீண்டும் பதற்றம்

ஜிரிபாம் மாவட்டத்தில், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் என மொத்தம் ஆறு பேரை, கூகி கிளர்ச்சியாளர்கள் கடத்திக் கொன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மெய்டி சமூகத்தினர், இம்பால், இம்பால் மேற்கு, கிழக்கு என, பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்தினர்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதை அடுத்து, 5,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், தலைநகர் இம்பாலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இக்கூட்டத்தில், 26 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற நிலையில், 17 பேர் பங்கேற்கவில்லை. இதற்கான காரணத்தை அவர்கள் முன்கூட்டியே தெரிவித்து விட்டனர்.

சட்ட விரோதம்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்:

ஜிரிபாம் மாவட்டத்தில் ஏழு நாட்களில், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேரை கூகி கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொன்றுள்ளனர்; இதை ஏற்க முடியாது.

இந்த சம்பவத்துக்கு காரணமான அவர்கள் மீது பாரபட்சமின்றி பெரியளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூகி கிளர்ச்சியாளர்களை சட்ட விரோத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்க வேண்டும். இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மணிப்பூர் மக்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய - மாநில அரசுகள் விரைவில் எடுக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்கே கடிதம்

தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிராகரித்த மெய்டி சமூக அமைப்பு, கூகி கிளர்ச்சியாளர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது.

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடும்படி ஜனாதிபதி முர்முவுக்கு, காங்., தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.


காலி சவப்பெட்டியுடன் ஊர்வலம்

மணிப்பூரில், ஆயுதமேந்திய கூகி கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில், கூகி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதை கண்டித்து சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் கூகி சமூகத்தைச் சேர்ந்த மக்கள், காலி சவப்பெட்டிகளுடன் நேற்று ஊர்வலம் நடத்தினர். 

காங்கிரஸ் வலியுறுத்தல்

காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:முதல்வர் பைரேன் சிங் தலைமையில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அவரை தவிர்த்து, 26 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதில் நான்கு பேர், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.அக்கட்சியும் பா.ஜ.,வுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. மணிப்பூரில் நடப்பது தெளிவாக தெரிகிறது. இருந்தும் எதுவும் நடக்காதது போல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடந்து கொள்கிறார். மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.உலகை சுற்றி வரும் பிரதமர் மோடி, பார்லி., குளிர் கால கூட்டத்தொடருக்கு முன், மணிப்பூருக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.