கோஹ்லி பாகிஸ்தானில் விளையாட விரும்புகிறோம்: போர் நடந்த நாட்களில் கூட..முன்னாள் புயல்வேக பவுலர்
20 கார்த்திகை 2024 புதன் 09:08 | பார்வைகள் : 152
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரில், இந்திய அணி விளையாட வழி செய்ய வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆனால், பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என பிசிசிஐ அறிவித்தது.
இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு இந்திய ஐசிசியிடம் கோரியது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் (Shoaib Akhtar), இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட இருக்கும் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "அரசாங்கங்கள் முடிவெடுப்பார்கள், பிசிசிஐயால் எதுவும் செய்ய முடியாது. விராட் கோஹ்லி தனது வாழ்க்கையில் முதல் முறையாக பாகிஸ்தானில் விளையாட விரும்புகிறார். அவர் நாட்டில் விளையாடுவதை பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தானில் விராட் கோஹ்லி சதம் அடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இது மிகப்பெரியதாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "ஊடக பேச்சுக்கள் உதவலாம். போர் நடந்த நாட்களில் கூட இது நடந்தது. நாம் தீர்வு காண வேண்டும். ஐசிசி இந்தியாவிடம் இருந்து 95-96 சதவீத ஸ்பான்சர்ஷிப்பைப் பெறுகிறது என்பது எங்களுக்குத் தெரியும்" என்றார்.