உக்ரேனின் இராணுவ திட்டங்கள் தொர்பில் வெளியாகியிய தகவல்
23 கார்த்திகை 2024 சனி 09:31 | பார்வைகள் : 653
உக்ரேனின் இந்த வருட இராணுவ திட்டங்கள் அனைத்தும் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் அன்ரி பெலோசோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா நேற்று உக்ரேனின் இலக்குகளைக் குறிவைத்து புதிய ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் வலுவைக் கொண்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியதனை அடுத்தே அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
வட பிராந்திய யுத்தமுனையில் உள்ள இராணுவத்தினரைச் சந்தித்து உரையாடிய நிலையில், உக்ரேனுக்குள் ஊருடுவும் ரஷ்ய துருப்பினர் தமது முன்னேறும் நடவடிக்கைகளை தற்போது துரிதப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா பாரிய ஆயுதங்களைப் பிரயோகிப்பது குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி, இதனை உலக நாடுகள் அவதானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அனைத்து தரப்பினரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும் என ரஷ்யாவின் நட்பு நாடான சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்தியதற்குப் பதிலடியாகவே நேற்று டினிப்ரோ நகரத்தின் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.