வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; இந்திய வானிலை மையம்
24 கார்த்திகை 2024 ஞாயிறு 06:08 | பார்வைகள் : 144
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.,24) தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கு அடுத்த இரண்டு தினங்களில், வடமேற்கு திசையில் தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் இன்று ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.