பார்லிமென்ட் இன்று கூடுகிறது : தேர்தல் முடிவு, அதானி வழக்கு எதிரொலிக்கும்
25 கார்த்திகை 2024 திங்கள் 03:32 | பார்வைகள் : 151
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று துவங்குகிறது. அமெரிக்காவில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது தொடரப்பட்டுள்ள லஞ்ச வழக்கு விவகாரத்தை எழுப்ப, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுஉள்ளன. எது குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி, டிசம்பர் 20 வரை நடக்கிறது.
இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு தன் அறிக்கையை கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு பதிவு
சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று எழுப்ப, காங்., - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இண்டி' கூட்டணி திட்டமிட்டுள்ளது.
மேலும், டில்லி காற்று மாசு, மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, ரயில் விபத்துகள் போன்ற முக்கிய பிரச்னைகளை எழுப்பவும் இண்டி கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர்.
குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கும் நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், தலைநகர் டில்லியில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது.
இதில், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்., மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகோய், தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி., சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லோக்சபா காங்., துணைத் தலைவர் கவுரவ் கோகோய் பேசுகையில், ''இந்திய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை பற்றிய எந்தவொரு குற்றச்சாட்டையும் அரசு நிராகரிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது.
''அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இவை குறித்து, கூட்டத்தொடரின் முதல் நாளே விவாதிக்க வேண்டும். மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இவை குறித்தும் விவாதிக்க வேண்டும்,'' என்றார்.
ஒத்துழைப்பு
அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
கூட்டத்தில், 30 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 42 தலைவர்கள் பங்கேற்றனர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிச்சயம் அவை பரிசீலிக்கப்படும்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் ஆகியோர் ஒப்புதலுடன், பார்லி.,யில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்து, அந்தந்த சபைகளின் அலுவல் ஆய்வு குழுக்கள் முடிவு செய்யும்.
அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே நோக்கம். கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த, அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.