அமெரிக்க இராணுவத்தில் இருந்து திருநங்கைகளை தடை செய்யும் உத்தரவு
25 கார்த்திகை 2024 திங்கள் 09:38 | பார்வைகள் : 658
அமெரிக்க இராணுவத்தில் உள்ள திருநங்கைகளை தடை செய்யும் உத்தரவை டொனால்டு ட்ரம்ப் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உத்தரவால் சுமார் 15,000 இராணுவ வீரர்கள் வரை பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இராணுவத்தில் சேவையாற்ற தகுதியற்றவர்கள் என அறிவிக்கவும் முடிவாகியுள்ளது.
ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பிக்கவுள்ளார்.
இதனால் அமெரிக்க இராணுவத்தில் இனி எந்தப் பிரிவிலும் திருநங்கைகள் பணியாற்ற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
2017ல் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் போதும், திருநங்கைகள் தொடர்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த ட்ரம்ப், தடை செய்ய இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
ஒபாமா அரசாங்கமே, திருநங்கைகளும் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கொள்கை திருத்தத்தை அமுலுக்கு கொண்டுவந்தது.
அதன் பின்னர் ஜோ பைடன் அரசாங்கம் ஜனவரி 2021ல் பதவியேற்ற ஐந்தாவது நாளில் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
2022ல் Major Jason Vero என்ற திருநங்கை விமானப்படையில் சாதித்த காரணத்தால் பல்வேறு விருதுகளை வாங்கினார்.
மேலும், 2020ல் இருந்தே திருநங்கை வீரர்களின் சிகிச்சைகளுக்காக அமெரிக்க இராணுவம் 26 மில்லியன் டொலர்கள் தொகையை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், அதுவரை 1800 என இருந்த திருநங்கைகளின் எண்ணிக்கை 3,700 என அதிகரித்தது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் திருநங்கை வீரர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதற்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் 17.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஹார்மோன் மருந்துகளுக்கு என 1.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
பாலினம் உறுதி செய்யும் அறுவைசிகிச்சைக்காக 7.6 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தில் 9.6 மில்லியன் வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்க ஆண்டுதோறும் சுமார் 50 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.