மாற்றத்துக்கான அனுரவின் பயணம்
25 கார்த்திகை 2024 திங்கள் 09:43 | பார்வைகள் : 130
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தென் பகுதியில் ஏனைய அரசியல் கட்சிகளுக்குள் பெரும் குழப்ப நிலை உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இந்த குழப்பம் எவ்வளவு பாரியதென்றால் கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளில் எவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கட்சி தாவல்கள் இன்னமும் காணக்கூடியதாக இருக்கிறது.
தெரண தொலைக்காட்சியையும், த மோர்னிங், அருண மற்றும் தமிழன் ஆகிய பத்திரிகைகளையும் ஆரம்பித்த திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மவ்பிம ஜனதா பக்ஷய (தாயக மக்கள் கட்சி) என்ற கட்சியை கடந்த வருடம் ஆரம்பித்தார்.
பின்னர் அவர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமய மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து சர்வஜன பலய (சர்வஜன சக்தி) என்ற கூட்டணியை நிறுவினார்.
ஆயினும் அக்கூட்டணி பதிவு செய்யப்பட்டு இருக்காததால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் நட்சத்திரம் சின்னத்திலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலை அடுத்து அவர் சர்வஜன பலய என்ற கூட்டணியின்; பெயரிலேயே அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான ரணசிங்க அவரது கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் கூட்டணியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்ததால் திலித்தின் கூட்டணியிலிருந்து ஒதுங்கி கொண்டுள்ளார். வேறு கட்சிகளில் இருந்து மேலும் பல அரசியல்வாதிகளும் இன்னமும் திலித்தின் கட்சியில் இணைகின்றனர்.
1950களில் இருந்து நாட்டில் இரு பிரதான கட்சிகளாக கருதப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் களத்திலிருந்து மறைந்து விட்டதாகவே தெரிகிறது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சிறிமா பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இறுதியாக மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்கியது. கடந்த வருடம் அது பிளவுபட்டு ஒரு பிரிவு ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தது.
மைத்திரியின் தலைமையிலான மற்றைய பிரிவு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க திட்டமிட்டது. பிளவை அடுத்து ஏற்பட்ட சட்டப் பிரச்சினை ஒன்றின் காரணமாக அது தடுக்கப்படவே விஜேதாச மற்றொரு கட்சியை இரவலாக பெற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார். அத்தோடு மைத்திரியின் குழு காணாமல் போய்விட்டது.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து, ஐக்கிய மக்கள் சக்தி 2020 ஆம் ஆண்டு பிரிந்து சென்றதிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி பெயரளவிலேயே நாட்டில் செயல்பட்டு வந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவே இறுதியாக அதன் தலைவராக இருந்தார். அவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் ஏதோ ஒரு காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சி சின்னத்தில் போட்டியிடாது கேஸ் சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
அவரோடு இணைந்து இருந்தவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதே சின்னத்தில் ஆனால் புதிய ஜனநாயக முன்னணி என்ற கட்சிப் பெயரில் போட்டியிடுகின்றனர். 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி அதே கட்சியில் போட்டியிட்டது. ஆனால் அப்போது அதன் சின்னம் அன்னமாக இருந்தது. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரில் ஏன் போட்டியிடவில்லை என்பது எவருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது.அக்குழுவினருக்கு தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதுமில்லை.
இம்முறை காணப்படும் மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால் மிகவும் பலமான அரசியல் குடும்பமான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் போட்டியிடாமையேயாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 2.5 வீத வாக்குகளை பெற்ற நாமல் ராஜபக்ஷ போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு செல்ல முயல்கிறார்.
ராஜபக்ஷ குடும்பம் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேறு பல முக்கியஸதர்களும் இம்முறை போட்டியிடுவதில்லை. அவர்கள் அரசியலில் இருந்து விலகுவதாக இறுதி நேரம் வரை அறிவிக்கவும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி தாம் தெரிவு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை இழந்தமையே பலர் போட்டியிலிருந்து ஒதுங்கிகொண்டதற்கான காரணம் என ஊகிக்கலாம்.
தோல்வியடைவதைப் பார்க்கிலும் மிகச் சில விருப்பு வாக்குகளை பெற்று வெட்கப்பட வேண்டி வரும் என்பது பலரது கவலையாகும்.
அதேவேளை அரசியல்வாதிகள் பொதுப் பணத்தில் சுகபோக வாழ்க்கையை நடத்துவதை நிறுத்துவதாகவும் ஊழலை தடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது. அக்கட்சி அவ்விடயங்களில் உறுதியாக இருப்பதாக தெரிவதால் தாம் அரசியலில் குதிப்பதில் அர்த்தம் இல்லை என்று பலர் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, படுதோல்வி அடைந்து அல்லது மரணித்து அரசியலில் இருந்து விலகுவதுயல்லாது இலங்கையில் அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை என்றும் முதல் முறையாக பல அரசியல்வாதிகள் இம்முறை ஓய்வு பெற்றிருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாடலும் போது கூறினார்.
இது முற்றிலும் உண்மை அல்ல என்ற போதிலும் பொதுவான உண்மையாகும்.
இம்முறை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றது. அனுர குமார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்த அவரது கட்சியான தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் அலை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
அத்தோடு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்காக சண்டைகள் உருவாகியிருக்கின்றன. கொள்கை இணக்கப்பாடு இல்லாது பல கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கும் போது இது சகஜமான நிலைமையாகும்.
ஏனெனில் பிரதான கட்சி ஒன்றுடன் இணையும் சிறு கட்சிகளின் தலைவர்களும் அமைப்பாளர்களும் பிரதேச ரீதியாக பிரதான கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாவதையே விரும்புவர்.
அதுவே வேட்பாளராவதற்கான தகைமையாகும். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலன்களே பெரும்பாலான கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த நிலையில் கட்சிகள் இணையும் போது தொகுதி அமைப்பாளர் ஆவதற்காக அக்கட்சிகளின் பிரதேச தலைவர்களிடையே போட்டியும் சண்டையும் ஏற்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று அதுவே நடந்துள்ளது.
தாம் வெறுமனே ஒரு ஆட்சி மாற்றத்தை அன்றி சமூக மாற்றத்தையே திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி கூறி வருகிறது.
அதற்காக பொருத்தமானவர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
எனவே அவர்கள் இம்முறை வெளியில் இருந்து எவரையும் வேட்பாளர்களாக சேர்த்துக்கொள்ளவில்லை. அக்கூட்டணியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி அதன் ஆரம்பத்திலிருந்தே தமது உறுப்பினர்களின் தரத்தையும் ஒழுக்கத்தையும் பற்றி மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதன் உறுப்பினர் ஒருவர் தமது பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து தமது நண்பர் ஒருவரை ஜப்பானுக்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு வந்தார். இது கட்சித் தலைவர்களுக்கு தெரிய வந்தது. போட்டிக் கட்சிகளுக்கு இதைப் பற்றித் தெரியாது. ஆயினும் மக்கள் விடுதலை முன்னணி அந்த உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்கியது.
இம்முறை பொதுத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைய பலர் முயன்றனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அவ்வாறு இணைய முயன்றார். ஆயினும் ஜனாதிபதித் தேர்தலில் தம்முடன் செயற்பட்டு பரிச்சயமானவர்களைத் தவிர வேறு எவரையும் வேட்பாளர்களாக இணைத்துக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி இருந்தமையால் அவ்வாறானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உரையாற்றும் போதும் ஜனாதிபதி அனுரகுமார பாராளுமன்ற உறுப்பினர்களின் தரத்தையே வலியுறுத்தினார்.
சமூக மாற்றத்துக்காக தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டுமாக இருந்தாலும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் தரமானவர்களாக இல்லாவிட்டால் தாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை அடைய முடியாது என்று அவர் வலியுறுத்தி கூறினார்.
குற்றமிழைப்பவர்கள் தமது கட்சியிலும் இருக்கலாம் என்றும் ஆனால் அவ்வாறானவர்களை பற்றி அறிந்த உடனேயே அவர்களை வெளியேற்ற தாம் தயங்காததே தமது கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையிலான பிரதான வேறுபாடுடொன்றாகும் என்று அவர் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒரு கூட்டத்தில் கூறினார்.
எனினும் எந்த சமூக மாற்றத்துக்கும் தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
நன்றி தமிழ்Mirror