நோர்து-டேம் திருத்தப்பணிகளுக்காக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள்!!
25 கார்த்திகை 2024 திங்கள் 19:05 | பார்வைகள் : 635
நோர்து-டேம் தேவாலயம் 2019 ஆம் ஆண்டு தீ விபத்துக்குள் சிக்கியதன் பின்னர் உலகம் முழுவதிலும் இருந்து நன்கொடைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. இந்த நன்கொடையாளர்களில் அமெரிக்கர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
திருத்தப்பணிகளுக்காக கிட்டத்தட்ட €700 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. அவற்றில் €59 மில்லியன் யூரோக்கள் அமெரிக்கர்களுடையது. கிட்டத்தட்ட 45,000 அமெரிக்கர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.
Starr Foundation, Marie-Josee மற்றும் Henry Kravis Foundation ஆகிய மூன்று நன்கொடை சேகரிப்பாளர்களும் இணைந்து இந்த தொகையினை திரட்டி நோர்து-டேம் தேவாலயத்துக்கு வழங்கியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்குள்ளான போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அது குறித்து தனது கவலையினை வெளியிட்டிருந்தபோது, நன்கொடை சேகரிப்பு தொடர்பிலும் மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். அதேபோல் டொனால்ட் ட்ரம்ப்மும் நன்கொடை சேகரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கியிருந்தனர். குறிப்பாக அமெரிக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனமான the Walt Disney Company, €5 மில்லியன் யூரோக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.