வங்கக்கடலில் வலுவடைகிறது புயல் சின்னம் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
26 கார்த்திகை 2024 செவ்வாய் 03:36 | பார்வைகள் : 130
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இன்று, வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும்.
தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று 21 செ.மீ., மழை
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகன மழை, அதாவது, 21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
விழுப்புரம், கடலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
* ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில், அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில், மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
நாளை முதல் 29ம் தேதி வரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'கண்காணித்து வருகிறோம்'
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பூமத்திய ரேகை பகுதியில் உருவாகும் இது போன்ற நிகழ்வுகள், அங்கிருந்து விடுபட்டால் தான், அதன் போக்கு குறித்து துல்லியமாக கணிக்க முடியும். பூமத்திய ரேகை பகுதியில் மேல்நோக்கி வரும், எம்.ஜே.ஓ., எனப்படும் வெப்ப மண்டல காற்று மற்றும் அழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி வருகிறது. அதே நேரத்தில் எதிரெதிர் காற்றும் வீசுகிறது. அங்கிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் விடுபட்டு, நிலத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் போது தான், அதன் தாக்கம் மற்றும் போக்கு குறித்து, மேலும் கணிக்க முடியும். இதன் நகர்வால், கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர் மழை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.