Paristamil Navigation Paristamil advert login

என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள்: சீமான்!

என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள்: சீமான்!

27 கார்த்திகை 2024 புதன் 09:11 | பார்வைகள் : 248


200 கோடி ரூபாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது பெரிது என்றால் நம்மிடம் ரூ.2000 கோடி பேரம் பேசியதை வேண்டாம் என்று விட்டுவிட்டு களத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி அரசியல் அரங்கில் புயலை கிளப்பி இருக்கிறார்.

தமிழக அரசியலில் மேடைக்கு மேடை நரம்புகள் புடைக்க, வியர்க்க, வியர்க்க பேசுவதில் நாம் தமிழர் சீமானின் ஸ்டைலே தனி. எந்த மேடையாக இருந்தாலும், பேட்டி என்றாலும் அதிரடியாக பேசாமல் போவதே இல்லை. சில தருணங்களில் அவர் பேசும் பேச்சுகள் அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட புயலை கிளப்பும்.

இப்போது லேட்டஸ்ட்டாக பேசிய சீமான், ரூ.200 கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது பெரியது என்றால் நம்மிடம் ரூ.2000 கோடி பேரம் பேசியதை வேண்டாம் என்று விட்டுவிட்டு களத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என்று பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தொண்டர்கள் மத்தியில் தான் இப்படி பேசியிருக்கிறார். அந்த கூட்டத்தில சீமான் பேசியதாவது;

இன்றைக்கு தமிழனின் வீரம் பெருமளவு எடுபடவில்லை. பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உலக நாடுகளுக்கு செல்லமுடியாமல் இருக்கிறேன் என்றால் அது எனக்காக அல்ல. வியர்க்காமல் விளையாட முடியாது, விமர்சனம் இல்லாமல் வளரமுடியாது. விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது.

நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்பது அரசியல் விடுதலைதான். தனித்து போட்டியிடுவது என்பது தனிச்சிறப்பு அல்ல. தனித்துவத்துதோடு போட்டியிடுகிறோம் என்பது தான் சிறப்பு. மக்களோடு களத்தில் நிற்பவர்கள் நாம் மட்டுமே.நாம் மக்களை நம்புகிறோம், எனவே அவர்களுடன் சேர்ந்து நிற்கிறோம்.

நாம் கூட்டணி வைப்பதில்லை, பேரம் பேசுவது இல்லை. நினைத்தால் வாங்கலாம். ரூ.200 கோடியை விட்டுவிட்டு வருவது பெரியது என்றால், ரூ.2000 கோடி பேரம் பேசும் போது அதை விட்டுவிட்டு களத்தில் நிற்கிறோம். எவ்வளவு பேர் எத்தனை சீட் தருகிறோம் என்று பேரம் பேசியிருப்பார்கள், உங்களுக்குத் தெரியாதா?

திரள் நிதி திரட்டும்போது பிச்சை எடுப்பதாக கூறுகின்றனர். பிச்சைக்காரர்களுக்கு நலத்திட்டம் செய்ய பிச்சை எடுக்கிறார். 1 சதவீதம், 2 சதவீதம் இருப்பவர்களுக்கு இவ்வளவு மார்க்கெட் இருக்கும் போது 8 சதவீதம் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கும்?

ஒருவாரம் படம் ஓடிய நடிகருக்கே அவ்வளவு மார்க்கெட் என்றால் 100 நாட்களுக்கு மேலாக தனித்துவமாக நடித்தவர்களுக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கும் தெரியுமா?

ரஜினியை சந்தித்ததை பற்றி பேசுகிறார்கள். ரஜினியும் நானும் சந்தித்துக் கொண்டால் இவர்களுக்கு என்ன பிரச்னை. உங்களை கேட்டுத்தான் சந்திக்க வேண்டுமா? நீங்கள் (தி.மு.க.) மட்டும் பிரதமரை காலையில் தந்தையும், மாலையில் மகனும் சந்தித்தீர்களே?

நாட்டை யார் ஆள்வார்கள் என்பதை என் தமிழ்ச் சொந்தங்கள் நகர்த்திவிட்டு, கடந்துவிட்டு செல்ல மாட்டார்கள். எப்படியும் இந்த நாட்டை நாங்கள் ஆள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

சீமானின் பேச்சை கண்ட அரசியல் விமர்சகர்கள் அவர் முழுக்க, தி.மு.க.,வையும், இன்று கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயையும் தாம் விமர்சித்துள்ளார் என்று கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது;

தி.மு.க.,வை தொடக்க காலம் தொட்டே சீமான் கடுமையாக விமர்சித்து தான் வருகிறார். இனியும் அவரது விமர்சனம் தொடரும். ஆனால் பல ஆண்டுகாலமாக கட்சியை நடத்தி வரும் சீமான், நேற்றைக்கு கட்சி ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக களத்தில் குதித்து இருக்கும் நடிகர் விஜயையும், அவரது கட்சியையும் மறைமுகமாக கிண்டலடித்து பேசி இருக்கிறார்.

நடிகர் விஜயின் கடைசி 8 படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. இன்றைய தேதியில் வசூல் கிங் என்று பெயரும் திரையுலகில் அவருக்கு இருக்கிறது. எனவே தான் 200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வந்திருப்பதையும், உங்களை விட அதிக மார்க்கெட் உள்ளவன் சீமான், அதனால் என்னிடம் 2000 கோடி ரூபாய் என்னிடம் பேரம் பேசினார்கள் என்றும் பேசியிருக்கிறார்.

2 ஆயிரம் கோடி பேரம் பேசினார்கள் என்பதில், எந்தளவுக்கு விஷயம் இருக்கிறது என்பதை, யாராலும் உறுதி செய்ய முடியாது. ஆனால், ஆமைக்கறி போல, இதுவும் வருங்காலங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் என்பது மட்டும் உண்மை.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்