பாகிஸ்தானில் இம்ரான்கானின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்கள்
27 கார்த்திகை 2024 புதன் 14:03 | பார்வைகள் : 441
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இஸ்லாமாபாத்தின் டி-சௌக் எனப்படும் ஜனநாயக சதுக்கத்தை அடைந்தபோது பாதுகாப்புப் படையினரால் கடுமையான கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், எதிர்ப்பாளர்கள் கடுமையாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அவர்களின் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டங்களின்போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 4 பாதுகாப்புப் பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.