Flamme de la Liberté - சில தகவல்கள்!!
1 மாசி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18178
நியூயார்க் நகரத்தில் உள்ள Statue of Liberty சிலை உலகம் அறிந்தது தான். அதன் ஒரு பிரதி பரிசில் உள்ளது. அதேபோன்ற கதை தான் Flamme de la Liberté க்கும்!!
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள Place de l'Alma இல் உள்ளது இந்த சுதந்திர தீ!! ஈஃபிள் கோபுரத்துக்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 'தீ' பிரான்ஸ்-அமெரிக்க விடுதலையை பறை சாற்றுகிறது.
முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்ட 'செப்பு' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த தீ. 3.5 மீற்றர்கள் உயரம் கொண்டது.
$400,000 பெறுமதியுள்ள இந்த சிலை, அமெரிக்காவின் 'டைம்ஸ்' (The New York Times International Edition) பத்திரிகையினால், 1989 ஆம் ஆண்டு பரிசுக்கு வழங்கப்பட்டது. பரிசில் வெளியாகும் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை, 1987 இல் தனது நூற்றாண்டை கொண்டாடியது. அதன் நினைவாகவே இந்த சிலை அமைக்கப்ட்டது.
டயானாவும், நினைவுச் சின்னமும்!!
இந்த சுதந்திர தீ, பின்நாட்களில் டயானாவின் உத்தியோகபூர்வமற்ற நினைவுச் சின்னமாக மாறியது.
1997 ஆம் ஆண்டு பரிசில் விபத்தில் இறந்த இளவரசி டயானாவின் நினைவுச் சின்னமாக இது தற்போது பார்க்கப்படுகிறது.
விபத்து Pont de l'Alma சுரங்கத்துக்குள் நிகழ்ந்ததால், இந்த சுதந்திர தீ, அவருக்கான அஞ்சலியாக பிந்நாட்களில் மாறிப்போனது.
9 ஆம் இலக்க மெற்றோவில் ஏறி Alma-Marceau நிலையத்தில் இறங்கினாலோ, RER C இல் ஏறி Pont de l'Alma நிலையத்தில் இறங்கினாலோ, 42, 63, 72, 80, 92 இலக்கங்களையுடைய பேரூந்துக்களில் ஏறினாலோ, இந்த தங்கத்தீயை பார்வையிடலாம்!!