இசைவாணி மீது புகார் இருந்தும் நடவடிக்கை இல்லை: நடிகை கஸ்துாரி
30 கார்த்திகை 2024 சனி 02:27 | பார்வைகள் : 322
புகார்கள் இருந்தாலும், தமிழக அரசால் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது போலும்,'' என நடிகை கஸ்துாரி கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
கடந்த நான்கு ஆண்டு களாக ஹைதராபாதில் தான் வசித்து வருகிறேன். இரண்டு படம், இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால், அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தடைபட்ட படிப்பு
தெலுங்கர்களை விமர்சித்து பேசியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, என்னை கைது செய்தது. அதனால், நான் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்புக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு, தடைபட்டுள்ளது.
அதோடு, என் மகனுடைய படிப்பும் தடைபட்டிருக்கிறது. எனவே, ஜாமினில் வெளி வந்து விட்டாலும், போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், அதில் தளர்வு கோரி கோர்ட்டில் முறையிட்டிருக்கிறேன். அது தொடர்பான விசாரணை வரும் 3ல் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
அய்யப்பனை மோசமாக விமர்சித்து பாடிய இசைவாணி விவகாரத்தில் புகார்கள் இருந்தும், அரசு தரப்பில் ஏன் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகத்தினரும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதிலிருந்து, அரசின் செயல்பாட்டை எல்லாரும் புரிந்து கொள்ளலாம். புகார்கள் இருந்தாலும், தமிழக அரசால் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது போலும்.
பேச முடியவில்லை
புகார் என்றதும், நடவடிக்கை எடுப்பதில் என் மீது காட்டிய அக்கறையை, மற்றவர்கள் மீது காட்ட முடியாத சூழலில் தான் தமிழக அரசு உள்ளது. இருந்தாலும், இது குறித்தெல்லாம் விரிவாக என்னால் பேச முடியவில்லை.
சிறையில் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத்தது; படித்தேன். எந்த விதத்திலும், யாருடைய நம்பிக்கையையும் நான் கெடுப்பது போல் பேசவில்லை. அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டேன்.
இவ்வாறு கஸ்துாரி கூறினார்.