Notre-Dame de Paris தேவாலயம் 8/12/2024 திறப்பு விழாவின் பின்னர் திறந்திருக்கும் நேரங்கள்.
30 கார்த்திகை 2024 சனி 08:29 | பார்வைகள் : 398
பிரான்ஸ் தேசத்தின் மிக முக்கியமான வரலாறு சின்னமாகவும், தரைவழியே பாரிஸ் நோக்கி வரும்போது பாரிஸ் இத்தனை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்பதன் (0)சைவர் புள்ளியாக திகழும் Notre-Dame de Paris தேவாலயம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பல மாற்றங்களை, பல சேதங்களை சந்தித்தது, 2013ம் ஆண்டு தனது 850வது நிறைவு விழாவைக் கொண்டாடியது. இதன் பின்னர் 15/04/2019 மாலை ஏற்பட்ட தீ விபத்தில் அதன் பெரும் பகுதி எரிந்து சாம்பலானது.
இதனை அடுத்து திருத்த வேலைகள் பக்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் நிதி உதவியோடு பெரும் எடுப்பில் ஆரம்பிக்கப்பட்டது சுமார் 5 ஆண்டுகள் 7 மாதங்கள் 23 நாட்களின் பின்னர் வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி பொதுமக்களின் பார்வைக்கும் பொது மக்களுடைய வழிபாடுகளுக்கும் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஆனால் டிசம்பர் 8-ம் திகதியில் இருந்து 16-ம் திகதி வரை விசேடமாக திறந்திருக்கும் நேர அட்டவணை ஒன்றை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 8-ம் திகதி மாலை 5:30-ல் இரவு 8:00 மணிவரையும், அதேபோல் 9-ம் திகதி திங்கட்கிழமையில் இருந்து 13-ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 3:30 மணியில் இருந்து இரவு 10:00 மணி வரையும், அடுத்து வரும் 14 சனி 15 ஞாயிறு தினங்களில் பிற்பகல் 3:30 மணியில் இருந்து இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். 16ம் திகதிக்குப் பின்னர் தேவாலயம் முன்பு திறந்திருக்கும் நேர அட்டவணைப்படி (காலை 7:45 மாலை 7:00) திறந்திருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.