சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினரிடையே மோதல்

1 மார்கழி 2024 ஞாயிறு 05:25 | பார்வைகள் : 4127
சிரியாவின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டின் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாகப் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் அதிகளவான இராணுவத்தினரை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரின் 50 சதவீதமான பகுதியை 30 ஆம் திகதி கைப்பற்றியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து குறித்த கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் பதில் தாக்குதலுக்குத் தயாராகவும் சிரிய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இலக்கு வைத்து சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், அலெப்போ நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அலெப்போவின் புறநகர்ப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ரஷ்ய மற்றும் சிரிய போர் விமானங்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிரிய இராணுவ தகவல்களை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2011இல் ஆரம்பமாகிய சிரியாவின் உள்நாட்டுப் போரில் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக ரஷ்யா தமது விமானப் படையை 2015ஆம் ஆண்டு சிரியாவுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.