பிரான்சில் எய்ட்ஸ் நோயோடு 200,000 பேர் வாழ்கின்றனர். சுகாதார அமைப்பு.

1 மார்கழி 2024 ஞாயிறு 07:18 | பார்வைகள் : 5473
இன்று டிசம்பர் 1-ம் திகதி 'உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்' இன்றைய நாளில் பிரான்ஸ் சுகாதார அமைப்பு ஒரு புள்ளி விபர அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் 'இதுவரை தமக்கு எய்ட்ஸ் நோய்க் கிருமியான HIV இருக்கிறதா?' என மருத்துவ பரிசோதனை செய்ததன் மூலம் நோய்த்தொற்று இருக்கிறது என உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் 200,000 பிரான்சில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் எய்ட்ஸ் நோய் பரவலுக்கு நான்கில் மூன்று சதவீதம் பாதுகாப்பு அற்ற பாலியல் உறவுதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தமக்கு நோய் தொற்று உள்ளதா என பரிசோதிப்பதில் இளம் தலைமுறையினர் மிக குறைவாகவே ஈடுபடுவதாகவும், ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கினரும் பெண்களில், மூன்றில் ஒரு பங்கினரும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பிறந்து பிரான்ஸ் வந்தவர்களில் பத்தில் நான்கு பேர் பிரான்ஸ் வந்தபின்னர் HIV எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் என தெரிவிக்கும் சுகாதார அமைப்பு. மிக பிரமாண்டமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக செய்யபட்டு வரும் நிலையிலும், இதுவரை பிரான்சில் பல லட்சக்கணக்கான மக்கள் தம்மை ஒருமுறையேனும் மருத்துவ பரிசோதனை செய்யாமலேயே வாழ்ந்து வருகின்றனர் என அந்த அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.
எயிட்ஸ் நோய் பரிசோதனை பிரான்சில் பல ஆண்டுகள் இலவசமாக, மருத்துவ பற்றுச்சீட்டு இன்றி சகல மருத்துவ நிலையங்களிலும் செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.