நிதி, வருவாய், உள்துறை கட்டாயம் வேணும்; அடம் பிடிக்கிறார் ஏக்நாத் ஷிண்டே
1 மார்கழி 2024 ஞாயிறு 07:47 | பார்வைகள் : 485
பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆனால், தனக்கு நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம் ஒதுக்க வேண்டும்' என ஏக்நாத் ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 230 இடங்களில் வென்றது. பா.ஜ., 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. கூட்டணியில் உள்ள சிவசேனா, 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ், 41 இடங்களிலும் வென்றன. பா.ஜ., அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தங்கள் கட்சிக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சியினர் தீர்மானமாக இருக்கின்றனர்.
இதை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஏற்றுக் கொண்டு விட்டார்; தனக்கு துணை முதல்வர் பதவி மட்டும் கொடுத்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே (தற்போதைய முதல்வர்) ஏற்கவில்லை. முதல்வர் பதவி தொடர்பாக முடிவு எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி, புதிய அரசு அமைவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆகும் பட்சத்தில், தனக்கு நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம் ஒதுக்க வேண்டும். இந்த மூன்று இலாகாக்களையும் சிவசேனாவுக்கு வழங்க முடியாவிட்டால், தனது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது என ஏக்நாத் ஷிண்டே பா.ஜ., தலைமையிடம் கூறியுள்ளார். இதற்கு பா.ஜ., தலைமையிடம் பதில் இல்லை.
இழுபறிக்கு தீர்வு காண ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து மஹாயுதி கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி ஷிண்டே, பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மும்பையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே இந்த சந்திப்பைத் தவிர்த்துவிட்டு, சதாராவில் உள்ள தனது கிராமத்திற்குச் சென்றுவிட்டார்.
மராத்தா சமூகத்தினர் இடையே ஏக்நாத் ஷிண்டேவுக்கு செல்வாக்கு உள்ளது. அது, பா.ஜ., அரசுக்கு மிகவும் முக்கியம். இதனால் ஏக்நாத் ஷிண்டேவை சமாதானம் செய்ய, பா.ஜ., தலைமை பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.