குரங்கம்மையின் துணை வைரஸ் பிரான்சில் கண்டுபிடிப்பு!!
7 தை 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 1458
ஆபிரிக்க நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்ட குரங்கம்மை நோய், பிரான்சிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், "clade 1b” எனப்படும் அதன் மற்றுமொரு திரிபு வைரஸ் முதன்முறையாக பிரான்சில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 6 ஆம் திகதி நேற்று திங்கட்கிழமை இதனை பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்சில் எங்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கவில்லை. தொற்றுக்குள்ளான குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தொற்றுக்குள்ளான குறித்த நபர் மத்திய ஆபிரிக்க நாடுகள் எதற்கும் சென்றிருக்கவில்லை எனவும், அதேவேளை ஆபிரிக்காவில் இருந்து வந்த இருவருடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் சங்கிலியை முறிக்கும் முயற்சியில் மருத்துவத்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
clade 1b திரிபு பிரித்தானிய, ஜேர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.