இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
22 வைகாசி 2018 செவ்வாய் 15:30 | பார்வைகள் : 18642
பரிஸ் முதலாம் வட்டாரம் பல ஆச்சரிய தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது. இன்று இதுகுறித்த சில அட்டகாசமான தகவல்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம்...!!
முதலாம் வட்டாரம் வெறுமனே 451 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1.8 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே!!
பரிஸ் முதலாம் வட்டாரத்தின் நிலப்பகுதி கிமு 52 இல் கண்டறியப்பட்டது. அதற்கு அப்போது பெயரே இல்லை!!
1861 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, முதலாம் வட்டாரத்தில் 89,519 மக்கள் வசித்தார்கள். அதாவது ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 49,025 பேர் வசித்தனர்.
ஆனால் அதன் பின்னர் பரிஸ் ஒருபோதும் அந்த எண்ணிக்கையை தொடவேயில்லை. நகரம் விஸ்தரிக்கப்பட, பரிசில் வட்டாரங்கள் அதிகரிக்க... குறைந்துகொண்டே வந்த எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டில் 17,614 பேர்காலுடன் சுருங்கிப்போனது.
ஆனால், இன்னொரு ஆச்சரியமும் உள்ளது. முதலாம் வட்டாரத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதுவென்றபோதும்... 63,056 பேர்கள் முதலாம் வட்டாரத்தில் பணி புரிகிறார்கள்.
பரிஸ் பல வட்டாரங்களாக 1860 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அதுவரை முதலாம் வட்டாரம் மட்டும் தான் பரிஸ் என்று எண்ணியிருந்தவர்களுக்கு 20 வட்டாரங்கள் மிகப் பெரும் நகரமாக அப்போது தோன்றியது. ஆனால் இன்று 'கிராண்ட் பரி' திட்டம்... இல்-து-பிரான்ஸ் மாகாணத்தையே பரிஸ் எனத்தான் சொல்கிறது.
ஒவ்வொரு வட்டாரத்தையும் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளனர். அதற்கு முதலாம் வட்டாரமும் விதிவிலக்கில்லை. Quartier Saint-Germain-l'Auxerrois
Quartier Les Halles,
Quartier Palais-Royal,
Quartier Place Vendôme
என நான்கு பிரிவுகள் உண்டு.
முதலாம் வட்டாரத்துக்குள் பார்க்கவேண்டிய இடங்கள் நிறையவே இருந்தாலும், அசைக்கமுடியாத ஒரு சுற்றுலாத்தலம்... சந்தேகமே இல்லாமல் லூவர் அருங்காட்சியகம் தான்...!!
அட்டகாசமான தகவல்கள் தான் இல்லையா..??
நாளை, இரண்டாம் வட்டாரத்துக்குச் செல்லலாம்.. காத்திருங்கள்!!