நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பு மனு தாக்கல்
8 தை 2025 புதன் 03:20 | பார்வைகள் : 290
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. பிப்ரவரி, 5ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட, திருமகன் ஈ.வெ.ரா., வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவு காரணமாக, 2023 ஜனவரி, 4ல் இறந்தார். அதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு பிப்., 27ல் இடைத்தேர்தல் நடந்தது.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, திருமகனின் தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர், 14ல், அவரும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். டில்லி சட்டசபைக்கு நேற்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதோடு சேர்த்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இத்தொகுதியில் நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது. வரும் 17ல் மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மறுநாள் 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற, 20ம் தேதி கடைசி நாள்.
அடுத்த மாதம், 5ம் தேதி ஓட்டுப்பதிவும், 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறையும் போட்டியிட உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 2023 பிப்., 27ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதில், மறைந்த இளங்கோவன், ஒரு லட்சத்து 10,556 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., 49,981 ஓட்டுகளை மட்டுமே பெற்றது.
அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. தற்போது, இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக உள்ளதால், இரண்டில் எது களமிறங்கும்; எது புறக்கணிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் போட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பதை டில்லி மேலிடத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்.- செல்வப்பெருந்தகை,தமிழக காங்., தலைவர்
11ல் அ.தி.மு.க., முடிவு
இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க, வரும் 11ல், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் நடக்க உள்ளது. அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியை போல் இத்தேர்தலையும் அ.தி.மு.க., புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.