ரோகித் சர்மா, விராட் கோலி இதை செய்யணும் - ரவி சாஸ்திரி
8 தை 2025 புதன் 05:51 | பார்வைகள் : 160
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து, முன்னணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இடைவெளி இருப்பதாக நினைத்தால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு காரணங்களுக்காக விளையாட வேண்டும். ஒன்று நீங்கள் இளம் தலைமுறை வீரர்களுடன் இருக்க முடியும். மற்றொன்று உங்கள் அனுபவங்களை அவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் பங்களிப்பை வழங்க முடியும்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக, நீங்கள் விளையாட நினைப்பதை விட அதிகளவு சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியும். இந்திய அணி போட்டிகளை திரும்பி பார்க்கும் போது, பந்து திரும்பக் கூடிய பிட்ச்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதில்லை. எதிரணியில் திறமைமிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தால், அவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்க முடியும். அவர்கள் இந்திய அணிக்கு தொல்லை கொடுத்துள்ளனர்," என்று தெரிவித்தார்.