'grippe' நோயாளர்களால் இடமின்றி தள்ளாடும் மருத்துவமனைகள்.
8 தை 2025 புதன் 10:33 | பார்வைகள் : 2104
பிரான்சில் 'grippe' எனும் தொற்று நோயின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல மருத்துவமனைகள் அந்த நோயாளிகளை அனுபவிப்பதில் இடம் இன்றியும், மருத்துவ பணியாளர்கள் இன்றியும் தள்ளாடி வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள 'Grippe' தொற்றுநோய் அலையால் மிகவும் மோசமான நிலைக்கு மருத்துவ மனைகள் தள்ளப்பட்டுள்ளன. அவசரகால நடவடிக்கையில் பல மருத்துவமனைகள் இறங்கி உள்ளன, விடுப்பில் இருக்கும் வைத்தியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், தாதிகள் போன்றவர்களை அவர்களது விடுமுறையை ரத்து செய்து மீண்டும் பணிக்கு திரும்புமாறு அவசரகால அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை "மக்கள் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும்.. இதை ஒரு சாதாரணமான விடயமாக எடுக்க வேண்டாம்"எனத் தெரிவித்துள்ளனர். பிரான்சில் ஆண்டொன்றுக்கு சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் குளிர்காலத்தில் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாவடைகின்றனர். அதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள்
65 வயதைத் தாண்டியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த பாதுகாப்பாக இருக்க வேண்டும், வேண்டிய இடங்களில் முக கவசத்தை பாவிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும், முடிந்தவரை கூட்டமாக சேருவதை தவிர்ப்பதும் கொண்டாட்டங்களை தவிர்ப்பதும் சிறந்தது என்றும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் மருத்துவ வட்டாரம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.