Les Misérables - பிரெஞ்சு தேசத்தின் பெருமைமிகு படைப்பு!!
15 வைகாசி 2018 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 18859
எந்த ஒரு படைப்பு தன் நிலம் சார்ந்த அரசியலையும், அதன் அவலங்களையும் பேசுகின்றதோ..., அது மிகப்பெரும் வரவேற்பை பெறுகின்றது. அப்படியான ஒரு நாவல், அந்த நூற்றாண்டின் சிறந்த நாவலாகவும், தலைமுறைகள் கடந்தும் கொண்டாடப்படும் நாவலாகவும் அமையும்..!!
Les Misérables !!
எழுத்துலகின் உச்சம் என கொண்டாடப்பட்ட இந்த நாவல், பிரெஞ்சு தேசத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் Victor Hugo இனால் எழுதப்பட்டது.
Jean Valjean எனும் நாயகனையும், அவனை சூழந்த சில பாசமிகு உறவுகளைச் சுற்றியும் இந்த கதை பின்னப்பட்டுள்ளது. வீதியில் படுத்துறங்கும் நாயகன், தன் சகோதரிக்கு உணவு அளிக்க ரொட்டித் துண்டுகளை திருடுகிறான்... இப்படியாக ஆரம்பிக்கும் இந்த கதை, பல பிரச்சனைகளுக்குள்ளால் பயணித்து, வாழ்வியலின் பல 'எபிசோட்'களை கடக்கிறது...
எதார்த்தத்தை பிரதிபலித்த அந்த நாவலை இப்போது வாசித்தால், நிச்சயம் பிரெஞ்சு தேசத்தில் நீங்கள் 1862 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் நீங்கள் வாழ்வதாக உணர்வீகள்..!!
இந்த நாவல், பின்னாளில் தொலைக்காட்சி தொடராக, திரைப்படமாக, மேடை நாடகங்களாக உருமாறியது. இந்த கதையை அடிப்படையாக கொண்டு 'தீம்' இசை பாடல்கள் கூட உருவானது..
பிரெஞ்சில் வெளியான இந்த நாவல், பல்வேறு பதிப்புக்களை கண்டது. மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலம், (நிற்க : ஆங்கிலத்தில் மாத்திரம் இந்த நாவல் 15 தடவைகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது!) ஸ்பானிஷ், இரஷ்ய மொழி என பல மொழிகளில் வெளியானது.
பிரெஞ்சு கற்றுக்கொண்ட உங்களுக்கு, இந்த நாவல் மற்றுமொரு வரப்பிரசாதம், பிரெஞ்சு மொழியின் நீள அகலத்தை, அதன் வீரியத்தை இந்த நாவல் பறைசாற்றும்..!!
இந்த நாவலில் இருந்து 'இன்ஸ்ஃபையர்' ஆகி, என்ன எடுத்தாலும், அது வெற்றி பெறுவதே இந்த நாவலின் முதல் வெற்றி!!
இந்த கதை மாந்தர்களின் தாக்கம் இல்லாமல், ஒரு படைப்பும் உங்களால் உருவாக்க முடியாது என்பது தான் இந்த நாவலின் கடைசியும் முதலுமான வெற்றி!!