Paristamil Navigation Paristamil advert login

முல்லை பெரியாறு விவகாரத்தில் நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை? சுப்ரீம் கோர்ட்

முல்லை பெரியாறு விவகாரத்தில் நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை? சுப்ரீம் கோர்ட்

9 தை 2025 வியாழன் 03:40 | பார்வைகள் : 404


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை?' என, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றில், அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கும் குறைவாக குறைக்க வேண்டும் எனக்கோரி கேரளாவைச் சேர்ந்த மேத்யூ நெடும்பரா என்பவர் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இவருடன் சேர்த்து இன்னும் சில வழக்கறிஞர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரங்களில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்; வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட புதிய கோரிக்கைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நிலச்சரிவு


அப்போது ஆஜரான வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா, ''ஒவ்வொரு முறையும் கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு போன்றவை ஏற்படும்போது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுகின்றன.

''அப்படி கேள்வி எழுந்த பின் தான் அணை பாதுகாப்பு குழு ஆய்வு செய்கிறது. ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பது இல்லை. குறிப்பாக அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எதையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இதற்கான நிபுணர் குழுவையும் அவர்கள் அமைக்கவில்லை,'' என, வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ''இந்த விவகாரத்தில் நிபுணர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை தேசிய அணைகள் பாதுகாப்பு கமிஷனிடம் தமிழக அரசு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாக ஆய்வு எப்போது கடைசியாக மேற்கொள்ளப்பட்டது? அணை பலமாக உள்ளதா என்பது தொடர்பாக மத்திய அரசின் நிபுணர் குழுவிடம் கேட்டு, இந்த விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்களை கொடுக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்.

நிபுணத்துவம்


மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அணை பாதுகாப்பு சட்டத்தின் படி, அணை பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை கொண்டு தேசிய குழு அமைக்க வேண்டும்.

ஆனால், இதுவரை அந்த குழு மத்திய அரசால் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அதில், அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய அளவிலான நிபுணர் குழு ஏன் அமைக்கப்படவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தேசிய அணைகள் பாதுகாப்பு கமிஷனும், நிபுணர்கள் குழு அமைக்கும் விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் உரிமையாளர் என்ற முறையில் தமிழக அரசை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யபடவில்லை. அது ஏன் என்பது தெரியவில்லை. இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


 

எழுத்துரு விளம்பரங்கள்