Paristamil Navigation Paristamil advert login

ஈ.வெ.ரா., பற்றி பேசிய சீமானுக்கு...புகார் வலை

ஈ.வெ.ரா., பற்றி பேசிய சீமானுக்கு...புகார் வலை

10 தை 2025 வெள்ளி 03:53 | பார்வைகள் : 318


ஈ.வெ.ரா., பற்றி தவறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சியினர், தமிழகம், புதுச்சேரியில் புகார் கொடுத்து வருகின்றனர். சீமான் எந்த நேரமும் கைதாகலாம் என, போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், தான் பேசியதில் எந்த தவறும் கிடையாது என்றும், தன் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றும் சீமான் கூறினார். அவரது நிலைப்பாட்டை பா.ஜ., வரவேற்றுள்ளது.

சீமான் மீது வழக்கு தொடரப்பட்டால், அதை சந்திக்க தேவையான ஆதாரங்களை, அவருக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

ஆண் - பெண் உறவு


கடலுாரில் பேட்டி அளித்த சீமான், ஆண் - - பெண் உறவு குறித்து, ஈ.வெ.ரா., கொச்சையாக எழுதி இருப்பதாக சொன்னார். அதிலிருந்து பிரச்னை கிளம்பியது.

ஈ.வெ.ரா., எங்கே, எப்போது அப்படி பேசினார் என்கிற ஆதாரத்தை சீமான் வெளியிட வேண்டும்; இல்லையேல், அவரை நடமாட விட மாட்டோம் என்று, த.பெ.தி.க., பொதுச்செயலர் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

சொன்னபடி அவரும், அவர் கட்சியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட, 24 பேர் நேற்று சீமான் வீடு முன் திரண்டனர். சீமானுக்கு எதிராக கோஷமிட்டபடி, வீட்டை முற்றுகையிட முயன்றனர்; போலீசார் தடுத்தனர்.

அப்போது, சீமான் கட்சியின் கரூர் மண்டல செயலர் சசிகுமார் அங்கு வந்தார். சீமான் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அவரது காரை தடுத்தனர். போலீசார் விலக்கினர்.

கார் சற்று முன்னோக்கி நகர்ந்த போது, காரை ஏற்றிக் கொல்ல பார்க்கிறான் என்று ஒருவர் சத்தம் போட்டார். 'சீமான் ஒழிக' என்று கோஷமிட்டனர்.

கார் கண்ணாடியை ஒருவர் கல்லால் அடித்து உடைத்தார். இதையடுத்து, 24 பேரையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். சசிகுமாரும் புகார் அளித்தார்.

புதுச்சேரியில் மோதல்


புதுச்சேரி நெல்லித்தோப்பில் நேற்று நடந்த நா.த.க., கூட்டத்தில் சீமான் பங்கேற்றார். த.பெ.தி.க.,வினர் 50 பேர், அங்கு வந்து சீமானை கண்டித்து கோஷமிட்டனர்; அவரது படத்தை செருப்பால் அடித்து, கட்சிக் கொடியை கிழித்து எறிந்தனர்.

போலீசார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு கட்சியினரும் மோதியதால் பதற்றம் ஏற்பட்டது. த.பெ.தி.க.,வினரை கைது செய்த பின், அமைதி ஏற்பட்டது.

தி.மு.க., புகார்கள்


'ஈ.வெ.ரா., குறித்து கீழ்த்தரமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் கருத்து கூறி, நாட்டில் கலவரத்தை துாண்டும் விதமாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., சட்டத்துறை துணைச் செயலர் மருது கணேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் நகர தி.மு.க., செயலர் பாலசுப்ரமணியம் தலைமையில், 'இண்டி' கூட்டணி நிர்வாகிகள், ஆத்துார் டவுன் போலீசில் சீமான் மீது ஏழு புகார் மனுக்கள் கொடுத்தனர்.

இதேபோல, மாநிலம் முழுதும் சீமான் மீது புகார் அளித்து, அவரை கைது செய்ய சதி நடப்பதாக நா.த.க., நிர்வாகிகள் கூறினர்.

எழுத்துரு விளம்பரங்கள்