மின் வாரிய இழப்பு ரூ.4,435 கோடியாக குறைந்தது
10 தை 2025 வெள்ளி 03:56 | பார்வைகள் : 246
அரசு நிதியுதவி, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால், 2023 - 24ல் மின் வாரியத்தின் வருவாய், 98,863 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதனால் ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டில் இழப்பு, 4,435 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
மின் வாரியம், 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் உள்ளதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, எட்டு ஆண்டுகளுக்கு பின், 2022ல் 30 சதவீதம், 2023ல் 2.18 சதவீதம், 2024ல், 4.83 சதவீதம் மின் கட்டணத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது. மின் வாரிய இழப்பை ஏற்கும் வகையில், 2023 - 24ல், 17,117 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதனால், அந்த ஆண்டில் மின் வாரிய வருவாய், 98,863 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. அதில் அதிகளவாக மின் கட்டணம் வாயிலாக, 63,687 கோடி ரூபாயும், அரசு மானியமாக, 14,976 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
மின் கொள்முதல், 48,581 கோடி ரூபாய், எரிபொருள், 11,952 கோடி ரூபாய், பணியாளர் நலன்கள், 10,229 கோடி ரூபாய், வட்டி, 16,440 கோடி ரூபாய் உட்பட மொத்த செலவு, 1 லட்சத்துக்கு, 58 கோடி ரூபாயாக உள்ளது. அதனுடன் ஓய்வூதியம், பணிக்கொடைக்கு, 3,240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இழப்பு, 4,435 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த, 2022 - 23ல் வருவாய், 82,398 கோடி ரூபாயாகவும், செலவு, 93,077 கோடி ரூபாயாகவும் இருந்தது. இழப்பு, 10,678 கோடி ரூபாயாக இருந்தது.
இது, 2021 - 22ல், 12,995 கோடி ரூபாய், 2020 - 21ல், 12,790 கோடி ரூபாய்; 2019 - 20ல், 11,965 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இருந்த இழப்பு, கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
311 பேருக்கு வேலை
தமிழக மின் வாரியத்தில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த, 311 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் முதல் முறையாக, மின் வாரிய ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள மொபைல் போன் செயலியையும், உதயநிதி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை செயலர் பீலா வெங்கடேசன், மின் வாரிய தலைவர் நந்தகுமார் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொபைல் போன் செயலி வாயிலாக, ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். மாதாந்திர ஓய்வூதியம் விபரம், ஆண்டு ஓய்வூதிய அட்டவணை பதிவிறக்கம் செய்யலாம். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற, 'ஆதார்' எண்ணை எளிதாக பதிவு செய்யலாம்.
மின் கொள்முதல்
தமிழகத்தில் வரும் மார்ச் முதல் கோடை காலம் துவங்குகிறது. இதனால், மின் தேவை அதிகரிக்கும். அதை பூர்த்தி செய்ய, வரும் ஏப்., 1 முதல் மே 15 வரை மின்சாரம் வாங்க, வாரியம் திட்டமிட்டுள்ளது.