திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி எச்சரிக்கை
10 தை 2025 வெள்ளி 03:58 | பார்வைகள் : 270
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். ஹிந்துக்களின் இந்த புனிதத்தலம் உள்ள மலை, முருகன் குன்றம் என்று அகநானுாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற பக்தி இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது.
மலை யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்னை வந்தபோது, 'மலை முழுதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது' என, லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட காலமாக மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதை தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதால், 1996ம் ஆண்டு, ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், குன்றில் உள்ள தீபத்துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், ஹிந்து அறநிலையத்துறை, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தற்போது எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.