ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மார்டின் கப்தில்
10 தை 2025 வெள்ளி 08:53 | பார்வைகள் : 243
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மார்டின் கப்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் (237*) அடித்த ஒரே நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கையில் வைத்திருக்கும் வீரர் மார்டின் கப்தில்.
2009ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் 47 டெஸ்ட் போட்டிகளில் 2586 ஓட்டங்களும், 122 டி20 போட்டிகளில் 3531 ஓட்டங்களும் அடித்துள்ளார். இதில் 2 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும்.
அதேபோல் 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 18 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் 7,346 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் (18) அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கப்தில் கொண்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தோனியை ரன்அவுட் செய்தது திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியதற்கு மார்டின் கப்தில் செய்த ரன்அவுட்தான் காரணம் என தோனி ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.
இந்த நிலையில், கப்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 38 வயது அதிரடி ஆட்டக்காரரான கப்திலின் ஓய்வு அறிவிப்பிற்கு ரசிகர்கள் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
குறிப்பாக தோனியை அவர் ரன்அவுட் செய்த வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.