கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கிறது..?
10 தை 2025 வெள்ளி 14:21 | பார்வைகள் : 277
ஊழல் செய்யும் அமைச்சர், அவரை எதிர்த்து நிற்கும் நேர்மையான அதிகாரி என்ற கதையுடன் வந்திருக்கும் ஆயிரத்து ஒன்றாவது திரைப்படம். தெலுங்கில் அந்தக் காலத்திலேயே இதை விட மிரட்டலான கதை கொண்ட எத்தனையோ அரசியல் படங்கள் வந்துவிட்டன. இயக்குனர் ஷங்கர் அவருடைய ஸ்டைலில் பிரம்மாண்டத்தை மட்டும் முதலீடாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்திற்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்கிறார் ராம் சரண். ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆனவர். மாநிலத்தின் முதல்வர் ஸ்ரீகாந்த்தின் இளைய மகனான அமைச்சர் எஸ்ஜே சூர்யா ஊழல் பேர்வழியாக இருக்கிறார். அடுத்த ஒரு வருட காலத்திற்கு நல்லாட்சி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்ரீகாந்த் நினைக்கிறார். அதற்கேற்றபடி கலெக்டர் ராம் சரண், சூர்யாவின் சட்ட விரோதச் செயல்களை தடுத்து நிறுத்துகிறார். இருவருக்கும் மோதல் அதிகமாகிறது. இது அடுத்து எப்படி செல்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஷங்கரின் படத்தில் என்னென்ன இருக்குமோ அவை அனைத்தும் ஒன்று விடாமல் இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ள கதை. ஷங்கரின் முந்தைய படங்களில் இருந்தே தேடி எடுத்து கதையை எழுதியிருக்கிறார். அதற்கு தன்னுடைய முந்தைய படங்களில் இருந்தே சில பல காட்சிகளைத் தேர்வு செய்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஷங்கர்.
ஐஏஸ் அதிகாரியாக படம் முழுவதும் அதிரடி காட்டியிருக்கிறார் ராம் சரண். அவரது சுறுசுறுப்பான, பரபரப்பான நடிப்புதான் படத்தைக் கொஞ்சமாவது தாங்கி நிற்கிறது. ஹீரோயிசமான காட்சிகளில் குட்டி சிரஞ்சீவியாகவே தெரிகிறார். பிளாஷ்பேக் காட்சியில் கிராமத்துப் போராளியாக மனதில் இடம் பிடிக்கிறார்.
ஒரு ஆக்ஷன் படத்தில் ஒரு கதாநாயகிக்கு என்ன முக்கியத்துவம் இருக்குமோ அது இருக்கிறது கியாரா அத்வானிக்கு. இரண்டு மூன்று பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள் என அவருடைய வேலை முடிவடைகிறது. பிளாஷ்பேக் ராம் சரண் மனைவியாக நடித்திருக்கும் அஞ்சலிக்கு முக்கியமான கதாபாத்திரம். அவருடைய அறிமுகக் காட்சியில் அவரா என அடையாளம் காண முடியவில்லை. அடுத்த காட்சியில்தான் அடையாளம் தெரிகிறது.
வில்லனாக எஸ்ஜே சூர்யா. இன்னும் எத்தனை படத்தில் இப்படி கத்தி, கூவி, ஆர்பாட்டமாக நடிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. அவருடைய நடிப்பு முழுவதும் டிராமாவாகவே இருக்கிறது. ஒரு வேளை தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னமோ ?. அந்த நடிப்பை 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட அவருடைய பல படங்களில் பார்த்துவிட்டோம்.
கடைசியில் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் முதல்வராக ஸ்ரீகாந்த். அவருடைய நண்பனாக சமுத்திரக்கனி. இவர்கள்தான் படத்தில் கொஞ்சமாவது யதார்த்தமாக நடித்திருப்பவர்கள். சூர்யாவின் அண்ணனாக ஜெயராம், ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறார். சைடிலேயே நடக்கும் டவாலி ஆக சுனில் என மற்ற நடிகர்கள் பட்டியல் நீளம்.
தமன் இசையில் முழுவதும் ஆர்பாட்டம் அதிரடி மட்டும்தான். 'ஜருகண்டி' பாடல் மட்டும் பிரம்மாண்டத்தில் வியக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் இடியாக உள்ளது.
படத்தின் கிளைமாக்ஸ் தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் காதுல பூ. சமூக வலைத்தளம், யு டியூப், நேரடி ஒளிபரப்பு என எதுவுமே உடனுக்குடன் வெளி உலகிற்கு வரும் இந்தக் காலத்தில் வாக்கு எண்ணும் மையத்தையே முதல்வர் வேட்பாளர் ஒருவர் அடியாட்களுடன் வந்து அடித்து நொறுக்குகிறார் என்பதெல்லாம் துளி கூட நம்பும்படியாக இல்லை.