Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சட்டசபையில் இ.பி.எஸ்., VS முதல்வர் ஸ்டாலின் காரசார விவாதம்!

சட்டசபையில் இ.பி.எஸ்., VS முதல்வர் ஸ்டாலின் காரசார விவாதம்!

10 தை 2025 வெள்ளி 16:53 | பார்வைகள் : 9771


சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு, போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது.

சட்டசபையில் இ.பி.எஸ்., பேசியதாவது: கடந்த முறை அவையில் தமிழர் பெருமைகளை கவர்னர் வாசிக்க மறுத்தார். இதற்கெல்லாம் போராட்டம் செய்யாத தி.மு.க., எதற்காக தற்போது போராட்டம் நடத்தியது. எதை திசை திருப்ப கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது தி.மு.க.,? கவர்னர் வருகை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை கூட சட்டசபையில் நேரலை செய்யவில்லை.

எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள். தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவதில்லை. அதில் என்ன உள்நோக்கம் உள்ளது. கருப்பு சட்டையை கண்டு அச்சமா? ஏன் எங்களை நேரலையில் காட்டவில்லை? அதனால் தான் இன்று வெள்ளை சட்டையில் சட்டசபைக்கு வந்திருக்கிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

முதல்வர் பதில்

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவர்னர் தனது உரையை சட்டசபையில் படிக்காமல் சென்றதால் தான் உடனே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். ஆளுங்கட்சியினர் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் தான் போராட்டம் நடத்தினார்கள். எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் தான் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியும்.

உடல்நலத்தை பாருங்க!

அனுமதி இல்லாத இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தான் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். உங்களது ஆட்சி காலத்திலும் இது போன்று தான் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் தனது உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

நீட் தேர்வு குறித்து விறுவிறுப்பான விவாதம்!

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை ஏன்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளன. சொன்னதை தான் செய்வோம். நீட் தேர்விற்கு விலக்கு கொண்டு வருவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதற்கு, 'சொன்னதை தான் செய்யவில்லையே; அதனால் தான் கேட்கிறேன்' என இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

இ.பி.எஸ்., கிண்டல்

இதற்கு, ' நாங்கள் ரத்து செய்வோம். முதல் கையெழுத்து போடுவோம் என்று சொல்லவில்லை. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம்' என ஸ்டாலின் பதில் அளித்தார். உடனே, 'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைவு. இண்டியா கூட்டணி தான் கலகலத்து போய்விட்டதே' என இ.பி.எஸ்., கிண்டல் அடித்தார்.

நீங்களும் தான் பா.ஜ.,வுடன் கூட்டணி இருந்தீர்கள் பின்பு விலகி இருக்கிறீர்கள்? என முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, 'திமுக போன்று நாங்கள் இரட்டை வேடம் போடவில்லை' என்றார் இ.பி.எஸ்., நான்கு வருடங்கள் ஆட்சியை காப்பாற்ற நீங்கள் நான்கு வேடம் போடவில்லையா? என பதிலடி கொடுத்தார் ஸ்டாலின்.

காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று இ.பி.எஸ்., எழுப்பிய கேள்விக்கு, 'நாங்கள் கூட்டணியில் இருந்த வரை நீட் தேர்வு உள்ளே நுழையவில்லை. நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வு வந்தது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

சவால்

சட்டசபை உணவு இடைவேளைக்குபிறகு மீண்டும் கூடியதும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இடையே மீண்டும் காரசாரமான விவாதம் நடந்தது.

முதல்வர்:பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்காததால் தான் அதனை பற்றி பேசுகிறோம்.

இ.பி.எஸ்.,: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தோம்.

முதல்வர்:காலம் கடந்து எடுத்த நடவடிக்கையை இங்கு பேசுகிறீர்கள். அண்ணா பல்கலை விவகாரத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டும் போராடுவது ஏன்?

இ.பி.எஸ்.,:நீதிமன்றம் சென்ற பிறகு தான் விசாரணை நடக்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம்.

முதல்வர் :மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பொள்ளாச்சியில் இரண்டு ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது. புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான ஆதாரங்களை நாளை சபாநாயகரிடம் கொடுக்கிறேன். இ.பி.எஸ்., சொல்வது உண்மை என்றால், அவர் சொல்லும் தண்டனையை ஏற்க தயார். நான் சொல்வது உண்மை என்றால், இ.பி.எஸ்., நான் சொல்லும் தண்டனையை ஏற்க தயாரா

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இருவரும் சவால் விட்டுள்ளீர்கள்.இருவர் பேசியதும் அவைக்குறிப்பில் பதிவாகி உள்ளது. இத்துடன் முடியுங்கள். நாளை ஆதாரத்தை வழங்குங்கள் என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்