பொள்ளாச்சி விவகாரம்; காரசாரமான விவாதம் !
11 தை 2025 சனி 07:49 | பார்வைகள் : 269
பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில், தங்கள் தரப்பு வாதங்களுக்கான ஆதாரத்தை சட்டசபையில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர், சபாநாயகரிடம் கொடுத்தனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதே உண்மை என அப்பாவு தெரிவித்தார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது, 'பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்காததால் தான் அதனை பற்றி பேசுகிறோம்' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு,'பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தோம்' என இ.பி.எஸ் பதில் அளித்தார்.
உடனே குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், 'காலம் கடந்து எடுத்த நடவடிக்கையை இங்கு பேசுகிறீர்கள். அண்ணா பல்கலை விவகாரத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டும் போராடுவது ஏன்? பொள்ளாச்சியில் இரண்டு ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது.
புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான ஆதாரங்களை இன்று சபாநாயகரிடம் கொடுக்கிறேன். இ.பி.எஸ்., சொல்வது உண்மை என்றால், அவர் சொல்லும் தண்டனையை ஏற்க தயார். நான் சொல்வது உண்மை என்றால், இ.பி.எஸ்., நான் சொல்லும் தண்டனையை ஏற்க தயாரா? என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இருவரும் சவால் விட்டுள்ளீர்கள். இருவர் பேசியதும் அவைக்குறிப்பில் பதிவாகி உள்ளது. இத்துடன் முடியுங்கள். இன்று ஆதாரத்தை வழங்குங்கள் என்றார். அதன்படி, ஆதாரங்களை சட்டசபையில் இன்று (ஜன.,11) அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தங்கள் தரப்பு வாதங்களுக்கான ஆதாரத்தை சமர்ப்பித்தனர்.
சபாநாயகர் அலுவலகத்தில் இரு கட்சிகளின் சார்பிலும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
சபாநாயகர் விளக்கம்
இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதே உண்மை. முதல்வர் சொன்னது அனைத்தும் உண்மை என ஆதாரங்களில் தெரிய வருகிறது. இருதரப்பும் ஆதாரம் கொடுத்ததில், முதல்வர் ஸ்டாலின் கூறியது உண்மை என தெரிய வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்தது 12 நாட்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சகோதரர் புகார் அளித்தும் அதை வழக்காக பதிவு செய்யவில்லை. இரண்டு பேர் ஆதாரத்தையும் நான் பார்த்துவிட்டேன். நான் சொல்வது தான் தீர்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.