Paristamil Navigation Paristamil advert login

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

12 தை 2025 ஞாயிறு 03:05 | பார்வைகள் : 432


சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை, தமிழக வனத்திருத்த சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

விழிப்புணர்வு

பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள்; 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு துாக்கு; பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை.

பெண்ணை பின்தொடர்ந்தால் முதல்முறை ஐந்தாண்டு, இரண்டாம் முறை ஏழு ஆண்டுகள் வரை சிறை; அமிலம் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தினால் ஆயுள் அல்லது துாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த மசோதா மீதான விவாதம் சட்டசபையில் நேற்று நடந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, வி.சி., - எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் -- நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் -- ராமச்சந்திரன், கொ.ம.தே.க., - ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன், சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் இச்சட்டத்தை வரவேற்று பேசினர்.

'இந்த சட்டங்களை யாரும் தவறாக பயன்படுத்தாமல் இருக்க வகை செய்ய வேண்டும். இச்சட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

அதை தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2023ல், மத்திய அரசு ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா -- பி.என்.எஸ்., மற்றும் பாரதிய நாகரிக் சுரக் ஷா - பி.என்.எஸ்.எஸ்., ஆகிய சட்டங்களை, தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை நியமித்தல், சென்னை மாநகர குடிநீர் வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட ஐந்து சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நேற்று குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டன.

அனுமதி

வன நிலங்களை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட அளவிலான நிலங்களை, காடு வளர்ப்புக்காக வழங்க வேண்டும்.

இது தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரங்களை, கலெக்டர் நிலைக்கு குறையாத வருவாய் துறை அதிகாரிக்கு வழங்க வகை செய்ய, தமிழக வனச் சட்டத் திருத்த மசோதாவை, வனத் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்தார்.

இந்த சட்ட மசோதாவும் நேற்று குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்