மதகஜராஜா படம் எப்படி இருக்கு?
12 தை 2025 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 341
ஒரு திரைப்படம் ஆரம்பமாகி, உருவாகி முடிந்து வெளிவருவது என்பது சாதாரண விஷயமல்ல. மற்ற வியாபாரங்களை விடவும் சினிமா வியாபாரம் என்பது சிரமம் வாய்ந்த ஒன்று. அதனால், பல படங்கள் வெளிவராமல் இன்னும் முடங்கிக் கிடக்கின்றன. அப்படி 12 வருடங்களாக முடங்கிக் கிடந்த படம் இன்று வெளிவருகிறது என்பது தமிழ் சினிமாவில் நடக்காத ஒன்று.
வேறு ஒரு படத்தின் தோல்விக்காக இந்தப் படத்தின் வெளியீட்டை இத்தனை வருடங்களாகத் தடுத்து வைத்திருந்தனர். திரையுலகில் உள்ள சிலரது முயற்சியால் அந்தத் தடைகள் அனைத்தையும் உடைத்து இன்று படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சுந்தர் சி இயக்கும் படம் என்றாலே ஒரு 'என்டர்டெயின்மென்ட்' நிச்சயம் இருக்கும் என்பதை கடந்த 30 வருடங்களாகக் காப்பாற்றி வருகிறார். அது போல இந்தப் படத்தையும் ரசிக்கும்படியான ஒரு படமாக எடுத்திருக்கிறார். இந்தக் காலத்திலும் புதிய படங்களை பழைய பார்முலாவில் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் பழைய பார்முலாவாக இருந்தாலும் பக்காவான பார்முலாவாக இருக்கும் இந்தப் படம் இரண்டு மணி நேரமும் தியேட்டரில் சிரித்து கொண்டாட வைக்கிறது.
தங்களது ஆசிரியர் மகளின் திருமணத்திற்குச் செல்கிறார்கள் விஷாலும், அவரது நண்பர்களும். விஷாலின் நண்பர்களில் சடகோபன் ரமேஷ் சப் கலெக்டராக இருந்து சஸ்பென்ட் ஆனவர். மற்றொரு நண்பரான நிதின் சத்யா ஒரு தொழிலில் நஷ்டமடைந்து தவிப்பார். டிவி சேனல்கள், பத்திரிகைகள், பல பிசினஸ்கள் நடத்தி மாநில ஆட்சியையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சோனு சூட் தான் இவர்களது நிலைக்குக் காரணம். சென்னை சென்று சோனுவை எதிர்த்து நின்று தன் நண்பர்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கிறார் விஷால். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்குரிய முழுமையான கதாபாத்திரம். காதல், ஆக்ஷன், நட்பு, காமெடி கலந்த கதாபாத்திரத்தில் விஷால். அந்தக் காலத்தில் இப்படியான கதாபாத்திரங்களில்தான் அவர் நடித்து வந்தார். அவர் மட்டும் என்ன அப்போதைய ஹீரோக்கள் பலரும் இப்படியான படங்களில்தான் நடித்தார்கள். ஆரம்பத்தில் அஞ்சலி மீது காதல், பின்னர் வரலட்சுமி மீது காதல், நண்பர்களுக்காக களம் இறங்குவது என காதலுக்கும், நட்புக்கும் முக்கியத்துவமான கதாபாத்திரம். விஷாலுக்குப் பொருத்தமாக அமைந்து, அவரும் அதற்கேற்றபடி நடித்து ரசிக்க வைக்கிறார்.
படத்தின் கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணம் சந்தானம். அந்தக் காலத்தில் நம்பர் 1 காமெடி நடிகராக இருந்தார். அந்த சந்தானத்தை இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பார்ப்பது ரசிர்களுக்கான காமெடி கலாட்டா. சந்தானம் அப்படியே காமெடியனாகவே இருந்திருக்கலாமே என படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது.
படத்தில் இரண்டு கதாநாயகிகள் அஞ்சலி, வரலட்சுமி. இருவரையும் காதலுக்காக நடிக்க வைத்ததை விட கிளாமருக்காக நடிக்க வைத்ததுதான் அதிகம். அதிலும் வரலட்சுமியின் கிளாமர் காட்சிகள் வின்டேஜ் டைப். இருவரும் நடனமாடும் இரண்டு பாடல்களும் ஆட்டம் போட வைப்பவை.
மனோபாலா, சந்தானம், விஷால் சம்பந்தப்பட்ட ஒரு 20 நிமிடக் காட்சி, நம்ப முடியாத ஒன்றாக இருந்தாலும் அவ்வளவு நேரமும் சிரித்து ரசிக்க வைக்கிறது. மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு என மறைந்த நடிகர்களை மீண்டும் திரையில் பார்ப்பது நெகிழ்ச்சி. விஷால் நண்பர்களாக சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா நடித்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளியாக சோனு சூட், கோட் சூட் உடன் வில்லத்தனம் செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா, சதா வந்து போகிறார்கள்.
விஜய் ஆண்டனி இசையில் 'சிக்கு புக்கு, மை டியர் லவ்வரு' பாடல்கள் அப்போதே ஹிட்டானவை. விஷுவலாகப் பார்க்கும் போது இப்போதும் புதிதாக இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்திற்கு பிளஸ் பாயின்ட். கலர்புல்லான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் ரிச்சர்ட் எம் நாதன்.
படத்தில் என்ன குறை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திரையில் நம் கண்களை வேறு விதத்தில் அலையவிட்டுள்ளார் இயக்குனர். இத்தனை வருடங்களுக்குப் பிறகு விமோசனம் கிடைத்துள்ள படம், இதில் குறை கண்டுபிடித்து என்ன நடக்கப் போகிறது. பொங்கல் விடுமுறையில் தியேட்டருக்குப் போய் கொண்டாடிவிட்டு வருவோம்.