ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரிய கட்சிகள் அனைத்தும்... ஒட்டுமொத்த புறக்கணிப்பு
13 தை 2025 திங்கள் 04:25 | பார்வைகள் : 428
இடைத்தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில், ஆளும் தி.மு.க.,வுக்கு அமோக வெற்றி வாய்ப்பு உருவாகி உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற பெரிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சூழலில், இது உறுதியாகி உள்ளது.
இரண்டாவது முறையாக இத்தொகுதியில், அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 10ம் தேதியே துவங்கி விட்டது.
ஆளும் தி.மு.க.,மட்டுமே வேட்பாளரை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி நாளைஅறிவிக்க உள்ளது.
நீண்ட விவாதம்
கூட்டணி கட்சியான காங்கிரசிடம் இருந்து, இந்த தொகுதியை கேட்டுப் பெற்ற தி.மு.க.,வுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக களமிறங்கும் என்றும், மும்முனை போட்டி நிலவும் என்றும் நினைத்தது.
அந்த கணக்கை பொய்யாக்கிய அ.தி.மு.க., தலைமை, விக்கிரவாண்டி வரிசையில் ஈரோடு கிழக்கையும் இணைத்துக் கொண்டது. 2023 இடைத்தேர்தலில் இங்கு நடந்த விதிமீறல்களை காரணம் காட்டி, போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணிப்பு முடிவை எடுத்ததால், அனைவரின் பார்வையும் பா.ஜ., மீது விழுந்தது. அக்கட்சி என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இச்சூழலில், சென்னையில் நேற்று அண்ணாமலை தலைமையில், நட்சத்திர ஹோட்டலில் நடந்த தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டத்தில், இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.அதில் எடுத்த முடிவுப்படி, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பா.ஜ.,வும் அறிவித்தது.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஆண்டு களாக, தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை பார்த்து வருகிறோம்.
எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லை.தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டுஇருக்கிறது.
அதிகார மமதை
அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராக, தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல்.கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலின் போது, பொது மக்களை பட்டியில் அடைத்து கொடுமைப்படுத்தியதை பார்த்தோம்.
ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை அனைவருமே எதிர்கொண்டோம்.வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.,வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தே.ஜ.,
கூட்டணி தொடர்ந்து செயல்படும்.
இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொது மக்களை அடைத்து வைக்க, தி.மு.க.,வை அனுமதிக்க, தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பவில்லை.மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பின், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை அகற்றி, மக்களுக்கான தே.ஜ., கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
இலக்கல்ல
அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற பெரிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.அவற்றின் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., - த.மா.கா., மற்றும் அ.ம.மு.க.,வும் புறக்கணித்து உள்ளன. புதிய வரவான த.வெ.க.,வும், 'இடைத்தேர்தல் எங்கள் இலக்கல்ல' என்று ஒதுங்கிக் கொண்டது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் பலத்துடன், தி.மு.க., களமிறங்கியுள்ளது. எதிர்த்து 'ஒண்டி'யாக சீமான் மட்டுமே மோதுவதால், ஆளும் தி.மு.க.,வுக்கு அமோக வெற்றி வாய்ப்பு உருவாகி உள்ளது.