Rue des Barres - சில அடடா தகவல்கள்!!

23 சித்திரை 2018 திங்கள் 13:30 | பார்வைகள் : 21410
பரிஸ் வீதிகள் எப்போதும் ஆச்சரியமானவை. பல ஆச்சரியங்களையும் வரலாறுகளையும் சுமந்துகொண்டு அமைதியாக தென்படும். நான்காம் வட்டாரத்தில் உள்ள Rue des Barres தெருவும் அதுபோல ஒன்றுதான்.
10 மீட்டர்கள் அகலமும், 130 மீட்டர்கள் நீளமும் கொண்ட இந்த தெரு, அரசு வைத்துள்ள ஆவணங்களின் படி 1260 ஆம் ஆண்டுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அது ஒன்றும் ஆச்சரியமான தகவல் இல்லை, பரிசில் இதுபோல் தொன்மம் நிறைந்த வீதிகள் உள்ளன.
எது ஆச்சரியம்...?? இங்குள்ள வீடுகள். தற்போது நவீன வசதிகள் கொண்ட வீடுகளில் நாம் வசித்தாலும், 15 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மர வீடுகள் இன்னமும் இங்கு பயன்பாட்டில் உள்ளன.
15 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மர வீடுகள் இன்றும் நிலை குலையாமல் நிற்கின்றது என்றால், அதன் உறுதியையும் கட்டிட கலையின் நேர்த்தியையும் என்னவென்று சொல்ல...,?
1152 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு 'மதுபான விடுதி' இருந்ததாகவும், 'பார் இருக்கிற வீதி என பழக்கத்தில் வந்து, பின்னர் அது நிரந்தரமாகவே Rue des Barres என பெயர் சூட்டப்பட்டது என்கிறது வரலாறு.
'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட புகழ், Johnny Depp, தன்னுடைய The Ninth Gate எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியை இந்த வீதியில் படமாக்கினார்.
பரிசுக்குள் ஆங்காங்கு மரவீடுகள் தென்பட்டாலும், ஒரு வீதியில் உள்ள 70 வீதமான வீடுகள் மரவீடுகளால் அமைந்துள்ளது, மொத்த பிரான்சிலேயே Rue des Barres, இங்குதான்!!
அடுத்தமுறை இந்த வீதியில் நீங்கள் செல்ல நேர்ந்தால், திருட்டுத்தனமாக இந்த வீடுகளை ஒரு நோட்டம் விட்டுச் செல்லுங்கள். காவல்துறை கைது செய்யாமல் விட்டால் சரி!!