நெரிசலை சமாளிக்க பக்தர்களுக்கு சுயகட்டுப்பாடு; தேவசம் போர்டு வேண்டுகோள்
14 தை 2025 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 670
திருப்பதியில் ஏற்பட்ட விபத்தை கருதி, சபரிமலையில் நெரிசலை தவிர்க்க, பக்தர்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, சபரிமலையை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் சன்னிதானத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மகரஜோதி தரிசனத்துக்காக, இரண்டு நாட்களாகவே சபரிமலை சுற்றுப்புறங்களில் பக்தர்கள் குடில் கட்டி தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு சமையல் செய்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் இருக்கும் இடத்திலேயே உணவு வினியோகிக்கப்படுகிறது.
இன்று காலை 10:00 மணி முதல் நிலக்கல்லில் இருந்து கேரளா அரசு பஸ் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் பம்பை வர அனுமதி கிடையாது. மதியம் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஒன்றரை லட்சம் பக்தர்கள், நாளை ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம். திருப்பதியில் சமீபத்தில் ஏற்பட்ட நெரிசல், அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு பக்தர்கள் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஜோதி தரிசனம் முடிந்தவுடன் அன்றே திருவாபரணம் அணிந்த அய்யப்பனை வழிபட அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பது சிரமம். 15, 16, 17 ஆகிய தேதிகளிலும் திருவாபரணம் அணிந்த நிலையில் மூலவரை வழிபடலாம். எனவே பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசித்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.