காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?
14 தை 2025 செவ்வாய் 13:43 | பார்வைகள் : 253
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று பொங்கல் தினத்தன்று (ஜனவரி 14) திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், அவருடைய காதலர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய தயாராக இருக்கும் நேரத்தில் அவருடைய காதலர் நித்யா மேனனுக்கு துரோகம் செய்கிறார். அந்த விஷயம் நித்யா மேனனுக்கு தெரிய வர இருவருக்கும் பிரேக் அப் ஆகிறது. இதைத்தொடர்ந்து நித்யா மேனன் செயற்கை கருத்தரிப்பு மூலம் கர்ப்பம் அடைகிறார்
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ரவி மோகன், காதல் தோல்வியால் பல பெண்களிடம் பழகி தன்னுடைய நாட்களை கடந்து வருகிறார். இதற்கிடையில் ரவி மோகன், தன்னுடைய நண்பன் வினய் ராய் சொன்னதன் அடிப்படையில் ஸ்பெர்ம்களை சேர்த்து வைக்கிறார். ஆனால் அந்த ஸ்பெர்ம்ஸ், நித்யா மேனன் கருப்பையில் செலுத்தப்படுகிறது. இந்த தகவல் அறியாமலேயே நித்யா மேனன் மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் சந்திக்கின்றனர். இதன்பிறகு இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் காதலிக்க நேரமில்லை படத்தில் மீதி கதை.
இந்த படத்தில் கிருத்திகா உதயநிதி, நித்யா மேனனின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் நித்யா மேனனும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இன்றைய, நாளைய காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார் நித்யா மேனன்.
எனவே முழுக்க முழுக்க நித்யா மேனனின் பாயிண்ட் ஆப் யூவில் கதை நகர்கிறது. மேலும் ரவி மோகன் நீண்ட நாட்களுக்குப் பிறகு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். வினய் ராய் இந்த படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் ஏ ஆர் ரகுமானின் இசை மற்றும் காவமிக் ஆரியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் சாமானிய ரசிகர்களின் வாழ்க்கையுடன் கனெக்ட் செய்யும் விதமாக அமையவில்லை. ஆகையினால் ஏ சென்டர் ரசிகர்களிடம் மட்டுமே இந்த படம் ரீச் ஆகும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் இருந்திருந்தால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.