ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர் அனைவரையும் விடுவிக்கணும்; மத்திய அரசு வலியுறுத்தல்
15 தை 2025 புதன் 02:30 | பார்வைகள் : 304
புதுடில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் அதிகாரிகளிடம், ' ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்' என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
போர் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் ரஷ்யா, வெளிநாடுகளை சேர்ந்தவர்களையும் தங்கள் ராணுவத்தில் இணைத்துக் கொள்கிறது. இதற்கென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை பயன்படுத்துகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாடுகளில் வேலை தேடுவோர், வேலைவாய்ப்பு ஏஜென்சிகளால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுவதும் நடக்கிறது.
தானாக விரும்பி, வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் ரஷ்ய ராணுவத்தில் சேருவோரும் இருக்கின்றனர். அப்படி ரஷ்ய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய கேரளாவை சேர்ந்த, 32 வயது இளைஞர் பினில் உயிரிழந்ததை அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம் உறுதி செய்துள்ளது. இவர் தன் மனைவி ஜாய்சியுடன் மாஸ்கோவில் வசித்து வந்தார். இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
புதுடில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் அதிகாரிகளிடம், ' ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்' என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ரஷ்யா ராணுவத்தில் பணி அமர்த்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக இறந்ததை நாங்கள் அறிந்தோம். இதேபோல் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு இந்தியர் காயமடைந்து மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுடில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்திடமும் இந்த விஷயம் வலுவாக எடுத்துரைக்கப்பட்டது.மீதமுள்ள இந்திய நாட்டினரை முன்கூட்டியே வெளியேற்றுவதற்கான எங்கள் கோரிக்கையையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.
இந்தியாவுக்கு விரைவாகக் மீட்டு அழைத்து வருவதற்காக நாங்கள் ரஷ்யா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். காயமடைந்த நபரை விரைவாக வெளியேற்றி இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ரஷ்யா ராணுவத்தில் பணிபுரிபவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறது.
அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.