பிரான்ஸ் குறித்து அவதூறு பரப்பும் மாலி நாட்டு ஜனாதிபதி!
15 தை 2025 புதன் 11:00 | பார்வைகள் : 650
ஆபிரிக்க நாடானா மாலிக்கும் பிரான்சுக்கும் இடையே முறுகல் நிலை நீடித்து வருகிறது. மாலி நாட்டு ஜனாதிபதி அந்நாட்டு மக்களிடையே பிரான்ஸ் குறித்து தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களையும், போலி தகவல்களையும் தெரிவித்து வருகிறார்.
சென்ற வாரத்தில், “பிரான்சில் அடிக்கடி மின்சார தடை ஏற்படுகிறது” என அவர் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. உரேனியம் தட்டுப்பாட்டினால் பிரான்சில் அடிக்கடி மின்சாரம் வழங்கல் தடைப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் பலமணிநேரங்கள் மின்சாரம் இன்றி பிரெஞ்சு மக்கள் அவதியுற்றதாகவும் மாலி நாட்டு ஜனாதிபதி அசிமி கோயிதா (Assimi Goïta) தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் பேசப்படும் பம்பரா (Bambara) எனும் மொழியில் அவர் தொலைக்காட்சி காணொளி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
“யுரேனியம் கிடைக்காத காரணத்தால், அவர்களின் நாட்டில் இப்போது ஏற்படும் மின்வெட்டுகளை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பார்த்திருப்பீர்கள். இந்த சூழ்நிலை அவர்களை முழுமையான விரக்தியில் ஆழ்த்துகிறது, ஏனென்றால் அவர்களிடம் இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை” என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இது முழுக்க முழுக்க போலியான தகவல் என பிரெஞ்சு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தம், திருத்தப்பணிகள் போன்றவற்றை தவித்து 2024 ஆம் ஆண்டில் மின்சார தடை ஏற்படவே இல்லை என மிக உறுதியாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள மாலி ஜனாதிபதி அசிமி கோயிதா, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவர் பிரான்சுக்கு எதிரான போலியான தகவல்களை தெரிவித்து, மாலி மக்களிடம் பிரான்ஸ் மீதான நன்மதிப்பை கெடுத்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.