மில்லியனுக்கும் அதிகமானோர் கொக்கைன் உட்கொள்கின்றனர்.... அதிர்ச்சி தகவல்!!
15 தை 2025 புதன் 12:27 | பார்வைகள் : 547
பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொக்கைன் போதைப்பொருளை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் அடிமையாக்கும் போக்குகளின் கண்காணிப்பகம் ( l'Observatoire français des drogues et des tendances addictives (OFDT)) இத்தகவலை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் 1.1 மில்லியன் பேர் ஒரு தடவையாவது கொக்கைன் உட்கொண்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். அவ்வருடத்தில் 600,000 பேர் கொக்கைன் உட்கொண்டிருந்தனர். ஒரே வருடத்தில் இந்த அசுர வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா, பொலிவியா, பெரு போன்ற நாடுகளில் இருந்து இந்த கொக்கைன் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதை பல்வேறு வழிகளில் பிரான்சுக்குள்ளும் நுழைகின்றன.
2010 ஆம் ஆண்டு பிரான்சில் 4.1 தொன் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதுவே 2023 ஆம் ஆண்டில் 23.5 தொன்னாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொக்கைனின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் இல்லை என்றபோதும், அது உற்பத்தி செய்யப்படும் அளவு பல மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.