விண்வெளியில் இந்தியா புதிய சாதனை: SpaDeX சோதனை வெற்றி! மோடி வாழ்த்து
16 தை 2025 வியாழன் 08:38 | பார்வைகள் : 140
விண்கல இணைப்பு சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது விண்வெளி ஆராய்ச்சி பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அதாவது SpaDeX என்று அழைக்கப்படும் விண்வெளி இணைப்பு சோதனையை (Space Docking Experiment) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, இந்தியா இந்த சிக்கலான தொழில்நுட்பத்தை தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக அமைந்துள்ளது.
ஜனவரி 15, 2025 அன்று, ISRO-வின் இரண்டு செயற்கைக்கோள்களான, SDX01 (துரத்துபவர்) மற்றும் SDX02 (இலக்கு) ஆகியவை பூமியிலிருந்து 475 கிலோமீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் “வரலாற்று சிறப்புமிக்க தருணம்" என்று வர்ணிக்கப்படும் இந்த முக்கிய சாதனை சொந்த நாட்டில் உருவாக்கப்பட்ட பாரதிய டாக்கிங் அமைப்பை(Bhartiya Docking System.) பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
வினாடிக்கு வெறும் 10 மில்லிமீட்டர் வேகத்தில் துல்லியமாக செயல்படுத்தப்பட்ட இந்த இணைப்பு நடவடிக்கை, மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை வெளிப்படுத்துகிறது.
சந்திரயான்-4 போன்ற சந்திர ஆய்வு திட்டங்கள் மற்றும் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டம் உட்பட எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இந்த முன்னேற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் செயற்கைக்கோள் விண்வெளி இணைப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய ISRO-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள x தளப்பதிவில், “ விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அனைத்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்”.
இது எதிர் வரும் காலங்களில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களில் குறிப்பிடத்தக்க படியாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.