மேன்முறையீட்டு நீதிமன்றில் அர்ச்சுனா விடுத்த கோரிக்கை
16 தை 2025 வியாழன் 14:34 | பார்வைகள் : 265
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடுமாறு கோரிய மனுவிற்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று புதன்கிழமை (15) மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
சமூக ஆர்வலரும் அபிநவ நிவாஹல் பெரமுனவின் தலைவருமான ஓஷல ஹேரத்தினால் தாம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் தனது அரசாங்க வைத்தியர் பதவியை இராஜினாமா செய்யாமல் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியதாகவும் அதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய எம்.பி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, அமர்வு உரிய முறையில் நியமிக்கப்படாததால் நாளை மறுதினம் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு அவருக்கு அறிவித்தார்.
அதன்பிறகு, மனு மீதான விசாரணையை 2025 ஜனவரி 31-ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.