Paristamil Navigation Paristamil advert login

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

17 தை 2025 வெள்ளி 02:43 | பார்வைகள் : 352


சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை 2023ல் தமிழக அரசு அமைத்திருந்தது.

அந்த குழுவில் பல்கலை மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கவர்னர் ரவி அறிவுறுத்தல் கொடுத்திருந்தார்.

இது விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு தாக்கல்செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு காரணங்களுக்காக வழக்கின் விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில், இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணா பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைகளில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும், வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ள சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலை மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும்போது, இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்