Paristamil Navigation Paristamil advert login

விமான நிலையங்களில் குடியுரிமை முத்திரைக்கு இனி காத்திருக்க வேண்டாம்

விமான நிலையங்களில் குடியுரிமை முத்திரைக்கு இனி காத்திருக்க வேண்டாம்

17 தை 2025 வெள்ளி 02:49 | பார்வைகள் : 409


விமான நிலையங்களில், இந்திய பயணியர் குடியுரிமை சோதனைப் பிரிவில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தடுக்க, புதிதாக எப்.டி.ஐ.டி.டி.பி., எனப்படும், விரைவான குடியுரிமை பரிசோதனை சேவையை, சென்னை, மும்பை, பெங்களூரு உட்பட ஏழு விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.

பரிசோதனை

உள்நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும்இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு திரும்பும் இந்தியர்கள், விமான நிலையங்களில் உள்ள குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற வேண்டியது அவசியம்.

பயணியர் எண்ணிக்கை காரணமாக முத்திரை பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எளிதாக்க, எப்.டி.ஐ.டி.டி.பி., எனப்படும், விரைவான குடியுரிமை பரிசோதனை சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இந்த சேவை தற்போது டில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் தற்போது அமலில் உள்ளது.

இது, சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, ஆமதாபாத் விமான நிலையங்களிலும் நேற்று அமலுக்கு வந்தது. நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இச்சேவையை நேற்று துவக்கி வைத்தார்.

இணையதளம்


இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணியர் மற்றும் பூர்விக இந்தியர்களாக இருந்து, வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்போர் மட்டுமே இந்த சேவையை பெற முடியும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், விமானத்தில் பயணம் செய்வதற்கு முன் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.ftittp.mha.gov.in இணையதளத்தில், தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பெரியவர்களுக்கு கட்டணமாக, 2,000 ரூபாய்; குழந்தைகளுக்கு, 1,000 ரூபாய்; வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 100 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8,300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஒரு முறை செலுத்தினால், அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதிவரை, அந்த கட்டணம் செல்லுபடி ஆகும். அத்துடன், தங்களின் முக அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், கருவிழிகள் போன்றவற்றையும், இணையதளம் வழியே பதிவு செய்ய வேண்டும்.

விமானநிலையத்தில் நவீன கருவிகள் உதவியுடன்,அவர்களின் முக அடையாளங்கள், பரிசோதிக்கப்பட்டு, உடனடியாக அவர்களுடைய பாஸ்போர்ட்டில்குடியுரிமை முத்திரை பதிக்கப்படும். பயணியர் வேகமாக, அடுத்த கட்ட சோதனைக்கு சென்று விடலாம். அதேபோல் வருகை பயணிகளும், விரைவாக சோதனை முடித்து, வெளியேறலாம்.

இதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நான்கு சிறப்பு கவுன்டர்கள், குடியுரிமை பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்பை பொறுத்து, இந்த கவுன்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்