பரிஸ் : 294 வீடற்றவர்களுக்கு தங்குமிடம் அமைத்துக்கொடுத்த காவல்துறையினர்!!
17 தை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 942
ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தின் போது SDF எனப்படும் வீடற்றவர்களுக்காக தங்குமிடங்கள் அமைத்துக்கொடுப்பது வழக்கமாகும். இம்முறை 120,000 பேருக்கான தங்குமிடங்களை இல் து பிரான்ஸ் மாகாணம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன் ஒரு அங்கமாக ஜனவரி 15, புதன்கிழமை பரிஸ் காவல்துறையினரின் தலைமைச் செயலகம் மேற்கொண்ட நடவடிக்கையில், 294 பேருக்கு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். பரிஸ் 10 ஆம் வட்டாரம் தொடக்கம் 19 ஆம் வட்டாரம் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஆபத்தான முறையில், சிறிய கூடாரங்களிலும், மெற்றோ நிலையங்களிலும் பூங்காக்களிலும் உறங்கிக்கொண்டிருந்தவர்களே வெளியேற்றப்பட்டனர்.
இல் து பிரான்ஸ் மாகாண சபை ஒவ்வொரு நாளும் 120,000 பேருக்கான தங்குமிடங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், கல்வி நிலையங்கள் என பல்வேறு இடங்களை இதற்காக இரவு நேரங்களில் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.