Paristamil Navigation Paristamil advert login

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய முள்ளிவாய்க்கால் மக்கள்"

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய முள்ளிவாய்க்கால் மக்கள்

17 தை 2025 வெள்ளி 15:50 | பார்வைகள் : 141


முள்ளிவாய்க்கால் என்பது முல்லைத்தீவின் கரையோர கிராமம் இங்கு பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழர்கள்.

இலங்கையின் இரத்தக்களறி மிகுந்த உள்நாட்டு யுத்தம் இங்கேயே முடிவிற்கு வந்ததால் முள்ளிவாய்க்கால் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை இன்றும் தொடர்கின்றது.

யுத்தத்தின இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல்போயுளள்ளனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால்கிராமம் பல மாதங்களாக இடம்பெயர்ந்த நிலையில் காணப்பட்டது.முள்வேலி முகாம்களிற்குள் இந்த கிராம மக்கள் தடுத்துவைக்கபட்டிருந்தனர்.ஓவ்வொரு வருடம் 18ம் திகதியும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்காக பெருமளவில் மக்கள் இந்த கிராமத்திலேயே கூடுவார்கள்.நினைவுகூருவார்கள்- துயரத்தை வெளிப்படுத்துவார்கள்- யுத்த காலத்தில் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகளிற்கு நீதியை கோருவார்கள்.

இதன் காரணமாக சில தமிழர்கள் இதனை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் என குறிப்பிடுகின்றனர்.

முள்ளிவாய்க்காலின் கரைகளிற்குஅருகிலேயே மியன்மாரில் நிகழும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பியோடும் ரோகிங்யாக்களின் - புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு டிசம்பர் 19ம் திகதி 2024 இல் தென்பட்டுள்ளது.

தீபனும் முள்ளிவாய்க்காலின் ஏனைய மீனவர்களும் முதலில் அந்த படகை பார்த்து உதவியுள்ளனர்.

படகிலிருந்தவர்களை பார்த்து பரிதாபமடைந்தேன் குறிப்பாக படகிலிருந்த பெண்கள் சிறுவர்களை பார்த்து பரிதாபப்பட்டேன் அவர்களை கரைக்கு கொண்டு வரவிரும்பினேன் என தீபன் தெரிவிக்கின்றார்.

நாங்களும் எங்கள் கிராமத்தவர்களும் அவர்களை கரைக்கு கொண்டுவந்து பராமரிக்க விரும்பினோம் எனவும் அவர் தெரிவிக்கின்றார். ஒரு தடவைக்கு பத்து பேர் என்ற அடிப்படையில் என்னால் அவர்கள் அனைவரையும் எனது படகில் கரைக்கு கொண்டுவந்திருக்க முடியும் என தெரிவிக்கும் அவர் ஆனால் நான் சட்டரீதியான விளைவுகள் குறித்து கவலை கொண்டிருந்தேன் என அவர் தெரிவிக்கின்றார்.

ரோகிங்யா அகதிகளை படகில் சென்று பார்வையிட்ட மற்றுமொரு மீனவர் பாஸ்கரன் .

அவரும் தீபனும் படகிலிருந்தவர்களை கரைக்கு கொண்டுவருமாறு கடற்படையினரை கேட்டுக்கொண்டனர்.

எனினும் கடற்படை அதிகாரிகள் தங்களிற்கு சிரேஸ்ட அதிகாரிகளிடமிருந்து இதற்கான அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் தீபன் மருத்துவர் ஒருவரையும், இரண்டு பொதுசுகாதார பரிசோதர்களையும்,கடற்படை அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு படகிலிருந்த ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை சென்று பார்த்திருக்கின்றார்.

அம்புலன்ஸ் ஒன்றும் அந்த பகுதிக்கு வந்தது.எனினும் ஒரு படகு கரைக்கு வந்ததால் அதனை பயன்படுத்தவேண்டிய தேவை எழவில்லை.

மீனவர்கள் படகில் இருந்தவர்களிற்கு வழங்குவதற்காக குளுகோஸ் நீர் உணவு போன்றவற்றையும் கொண்டு சென்றுள்ளனர்.படகில் இருந்தவர்கள் பசியில் சிக்குண்டிருந்தவர்கள் போல தோன்றினார்கள் அவர்கள் மகிழ்ச்சியுடன் நாங்கள் கொண்டு சென்றவற்றை பெற்றுக்கொண்டனர் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபன் 20 தடவைகள் ரோகிங்யா அகதிகளை ஏற்றிக்கொண்டு கரைக்கு வந்துள்ளார்.

படகில் பலர் முல்லைத்தீவு கரைக்கு வந்தசெய்தி பரவத்தொடங்கியதும் பலர் உணவுகளுடன் முள்ளிவாய்க்காலிற்கு வந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பிலிருந்தும் சிலர் உணவுப்பொருட்களை கொண்டுவந்துள்ளனர். அன்று மாலை ரோகிங்யா அகதிகளை ஏற்றிக்கொண்டு கடற்படையினர் திருகோணமலை புறப்படத்தயாராகிக்கொண்டிருந்த அந்த தருணத்திலும் தீபன் அந்த உணவுப்பொருட்களை புகலிடக்கோரிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

தங்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய மீன்பிடி படகுகள் குறித்து தீபனும் பாஸ்கரனும் கடும் கருத்துக்களை கொண்டிருந்தாலும் .படகுகள் மூலம் தங்கள் பகுதிக்கு வந்துசேர்ந்த ரோகிங்யாக்களை வரவேற்பதில் அவர்களிற்கு ஆதரவளிப்பதில் தீபனும் பாஸ்கரனும் மிகச்சிறந்த முறையில் செயற்பட்டுள்ளனர்.அவர்கள் ஒடுக்குமுறையிலிருந்து தப்பியோடுகின்றனர் அவர்களிற்கு உதவவேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் அவ்வாறு செயற்பட்டனர்.

திருகோணமலை

ஏற்கனவே இரண்டு வாரங்களாக கடலில் அலைந்து திரிந்த ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை கடற்படையினர் 19ம் திகதி முழுவதும் கடலிலேயே வைத்திருந்தனர்.அன்று மாலை 20 திகதி கடல்வழியாக அவர்களை திருகோணமலைக்கு கொண்டு சென்ற கடற்படையினர் 20ம் திகதி அவர்கள் தரையிறங்குவதற்கு அனுமதித்தனர்.

திருகோணமலையில் உள்ள அரசாங்க அதிகாரிகளும் சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் அவர்களிற்கு உணவுகள் உடைகள் போன்றவற்றை வழங்கியுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த பத்திரிகையாளர் அமடொரு அமரஜீவ என்பவர் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை பேட்டி கண்டுள்ளார்.அவர்கள் பட்டினியாகவும் களைப்படைந்த நிலையிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில பெண்களும் சிறுவர்களும் நீர்இழப்பினால் பாதிக்கப்பட்டிருந்தன அவர்கள் நடக்ககூடமுடியாத நிலையில் காணப்பட்டனர்.மிகவும் குறைந்தளவு சுகாதார வசதிகளுடன் அவர்கள் 16 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளனர்.

நாங்கள் மூன்று படகுகளில் புறப்பட்டோம் இரண்டு படகுகள் பழுதடைந்துவிட்டன,அந்த படகிலிருந்தவர்களும் இந்த படகில் ஏறினர் என அகதியொருவர் தெரிவித்துள்ளார்.

கடல்பயணத்தின் போது ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் அவர்களின் உடல்களை கடலிற்குள் வீசியுள்ளனர்.

தனது நாட்டில் இடம்பெறும் இனமோதல் காரணமாகவே தான் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிpவித்துள்ள அகதியொருவர் தான் தனது நாட்டு படையினருக்கு இலஞ்சம் வழங்கியே அங்கிருந்து  வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.தனது கிராமம் குண்டுவீச்சிற்கு இலக்கானது என தெரிவித்துள்ள மற்றுமொரு அகதி தான் பாதுகாப்பிற்காக நாட்டிலிருந்து வெளியேறவேண்டிய நிலையேற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனது கிராமத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது நான் எனது உயிர்பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தேன் என மற்றுமொரு அகதி தெரிவித்துள்ளார்.அவர்கள் தெரிவித்த விடயங்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழும் ரோகிங்யா நண்பர்களும் இரண்டு வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாண கடற்பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பின்னர் இலங்கையில் இரண்டு வருடங்களாக தற்காலிகமாக தங்கியுள்ள ரோகிங்யா இனத்தவர்களும் தெரிவிக்கும் விடயங்களுடன ஒத்துப்போகின்றன.

முல்லைத்தீவிற்கு சமீபத்தில் ரோகிங்யா அகதிகள் வருவதற்கு முன்பாக இலங்கையில் 100 பேர் தங்கியுள்ளனர் இது தவிர பங்களாதேஸில் மில்லியன் கணக்காணவர்கள் வாழ்கின்றனர்.

மியன்மார் அரசாங்கத்தினால் ரோகிங்யா அகதிகள் ஒடுக்குமுறைக்குள்ளாவது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தற்போது ஆராய்ந்து வருகின்றது.மியன்மார் அரசாங்கத்தினை கம்பியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியிருந்தது.

தடுத்து வைத்தலும் நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும்.

மூன்று நாட்கள் திருகோணமலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் முல்லைத்தீவிற்கு டிசம்பர் 23ம் திகதி கொண்டுசெல்லப்பட்டனர் . அவர்கள் அங்குள்ள விமானப்படை முகாமில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை சென்று பார்ப்பது குறித்து தானும் ஏனையவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்த தீபன்இஅதிகாரிகள் அதற்கான அனுமதியை வழங்கும்வரை காத்திருப்பதாக தெரிவித்தார்.

ரோகிங்யா அகதிகளின் படகிற்கு தான் பல தடவை சென்றுள்ளதால் சில அகதிகளிற்கு தன்னை நினைவிருக்ககூடும் என அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களை முல்லைத்தீவு வர்த்தகர்களும் வழங்கியுள்ளனர் உதவிகளை வழங்கிய செஞ்சிலுவை சங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிற்கு என்ன தேவை என்பது குறித்து அறிவதற்காக உள்ளுர் மக்கள் அந்த தடுப்பு முகாமிற்கு சென்றவேளை குடிவரவு துறை அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்து விமானப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும் குடிவரவுதிணைக்கள அதிகாரிகள் எவரும் அங்கு காணப்படவில்லைஇஅவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்பட்ட தொலைபேசி இலக்கம் ஊடாக அவர்களை தொடர்புகொள்ள முயன்ற போது அது வெற்றியளிக்கவில்லை.

டிசம்பர் 26ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை சென்று பார்க்க முயன்றவேளை அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

படகில் வந்தவர்களை பதிவு செய்வதற்காகவும் அவர்களின் புகலிடக்கோரிக்கையை ஆராய்வதற்காகவும் அவர்களை சென்று பார்ப்பதற்காக யுஎன்எச்சிஆர் காத்திருக்கின்றது. 

நன்றி வீரகேசரி