டில்லி சட்டசபை தேர்தலில் கட்சிகளின் இலவச வாக்குறுதி
18 தை 2025 சனி 02:54 | பார்வைகள் : 227
டில்லியில் வரும் 5ம் தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அனைத்து கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு சற்றும் சளைக்காமல், பாரதிய ஜனதா கட்சியும் அதிரடியான இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்க, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தீவிரமாக வேலை செய்கிறது. ஆம் ஆத்மியிடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரசும், பா.ஜ.,வும் பிரசாரம் செய்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், என்ன செலவாகும், எப்படி நிதி திரட்டுவது, நிறைவேற்றுவது சாத்தியமா என்ற யோசனையே இல்லாமல் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதிகளை கொட்டுகின்றன.
இலவசங்களால் நாடு குட்டிச் சுவராகும் என்கிற அளவுக்கு மற்ற கட்சிகளை விமர்சித்து வந்த பா.ஜ.,வும் அதே பாதைக்கு திரும்பியிருப்பது, பலரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
அரசை திவாலாக்க மூன்று கட்சிகளும் போட்டி போடுவதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பா.ஜ., கர்ப்பிணிகளுக்கு 21,000 ரூபாய் தருவோம்; முதல் குழந்தைக்கு 5,000, அடுத்த குழந்தைக்கு 6,000 தருவோம், முதியோருக்கு மாதம் 3,000 பென்ஷன் தருவோம் என்று அடுக்கடுக்காக அறிவித்து, தேர்தல் களத்தை அதிர வைத்துள்ளது.
ஒரு சில இலவசங்கள் ஏற்கனவே அமலில் இருந்தாலும், அவற்றின் மதிப்பு கணிசமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர்.
மூன்று கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகள்
ஆம் ஆத்மி
பெண்களுக்கு மாத உதவித்தொகை 2,100 ரூபாய்
60 வயது தாண்டியவர்களுக்கு இலவச சிகிச்சை
பூசாரிகளுக்கு மாதம் 18,000 ரூபாய்
ஆட்டோ ரிக்ஷா டிரைவருக்கு 15 லட்சம் ரூபாய் காப்பீடு
இலவச குடிநீர், மின்சாரம், கல்வி
காங்கிரஸ்
500 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர்
இலவசமாக ரேஷன் வழங்கப்படும்
300 யூனிட் வரை இலவச மின்சாரம்
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய்
25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 8,500 ரூபாய்
பாரதிய ஜனதா
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய்
அடல் கேன்டீனில் 5 ரூபாய்க்கு சாப்பாடு
காஸ் சிலிண்டர் மானியம் 500 ரூபாய்; ஹோலி,தீபாவளி பண்டிகைகளுக்கு இலவச சிலிண்டர்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களோடு 21,000 ரூபாய் நிதி
5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு
60 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு மாத பென்ஷன் 2,500 ரூபாய்
70 வயதுக்கு மேல் 3,000 ரூபாய்
முதியோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை