சென் நதிக்குள் பாய்ந்த பேரூந்து! - ஒரு நூற்றாண்டுகால தலைப்புச் செய்தி!!
3 சித்திரை 2018 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 20746
கடந்த 2010 ஆம் ஆண்டின் ஜூலை மாத இறுதியில் பேரூந்து ஒன்று சென் நதிக்குள் பாய்ந்தது. ஒஸ்ரியா நாட்டில் இருந்து வந்திருந்த இந்த பேரூந்து, பரிசுக்குள் உள்ள அழகிய இடங்களை பார்வையிட்டுக்கொண்டே வர, Iena பாலத்துக்கு அருகே, பேரூந்து சாரதியின் கவனையீனம் குறைவாக பேரூந்து சென் நதிக்குள் பாய்ந்தது.
ஆனால் அது ஒன்றும் அத்தனை பாரதூரமான விபத்து இல்லை.. 'ஜெட்' வேகத்தில் வந்திறங்கிய மீட்புக்குழு தடாலடியாக பாய்ந்து சுற்றுலாப்பயணிகளை மீட்டு, பேரூந்தை தூக்கி வெளியில் கடாசி, ஒரு மணிநேரத்தில் அடையாளத்தையே அழித்தனர். பத்திரிகைகளில் மறுநாள் சின்ன பகுதியாக அந்த செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால், அதே போன்றதொரு சம்பவம்... முன் பக்கத்தில் தலைப்புச் செய்தியான வரலாறு ஒன்று உள்ளது.
செப்டம்பர் 27, 1911 ஆம் ஆண்டு, Archbishop's Bridge இல் சென்றுகொண்டிருந்த பரிஸ் பேரூந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென் நதிக்குள் பாய்ந்தது.
பேரூந்தை ஆற்றில் இருந்து மீட்க மூன்று நாட்கள் ஆனது. அப்போது பேரூந்தை உடனடியாக மீட்கக்கூடிய வசதிகள் ஒன்று இருக்கவில்லை என்பது தான் உண்மை. மொத்தமாக 11 பேர்களை பலியெடுத்தது இந்த விபத்து. தவிர 9 பேர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்தனர்.
Archbishop's மேம்பால 1828 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பின்னர், நகர விஸ்தரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, விபத்துக்கு முந்தைய வருடமான 1910 ஆம் ஆண்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விபத்து மிகப்பெரும் சோக அலையை உண்டு செய்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் இந்த விபத்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது.