பூனைகளுடன் ஒரு Café! - பரிசில் அவசியம் பார்க்கவேண்டி இடம்!!
31 பங்குனி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18058
உலகில் தலைசிறந்த Café பிரான்சில் மட்டுமே கிடைக்கின்றது. குறிப்பாக பரிசில் கஃபே பருகுவது என்பது அலாதி இன்பம். அதற்கு சுவை மட்டுமே காரணமில்லை. இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
கஃபேக்களின் வடிவமைப்பு மிக மிக முக்கியம். ஒவ்வொரு கஃபேகளும் ஒவ்வொரு ரகம். ஒரு கடைக்குள் நுழைந்தால்... அங்கு எல்லாமே பழைய ஒல்லாந்தர் கால பொருட்களாக இருக்கும். மற்றுமொரு கடைக்குள் நுழைந்தால் அங்கு மோட்டார் பைக்குளில் உதிரிப்பாகங்களாக அடுக்கப்பட்டிருக்கும்... இதையெல்லாம் ஒத்துக்கலாம்... ஆனால் ஒரு கஃபே முழுவதும் பூனைகள் நிறைந்திருந்தால்...??
அட.. உண்மையில் பூனைகள் தான். நீங்கள் சாவகாசமாய் அமர்ந்து கஃபே பருக, பல நிறங்களில் பல 'சைஸ்'களில் பூனைகள் அங்கும் இங்கும் உலாவித்திரியும்.
அட்டகாசமான ஐடியாவா இருக்கே?? என நீங்கள் எண்ணுவது புரிகிறது. இங்கு செல்வதற்கு முன்னர் மேலும் சில தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
பூனைகள் நலன்புரி சங்கத்தில் இருந்து பெறப்பட்ட மிக ஆரோக்கியமான பூனைகள் மாத்திரமே இங்கு உள்ளன..
நீங்கள் ஒருபோதும் தூங்கிக்கொண்டிருக்கும் பூனைகளை எழுப்பிவிடக்கூடாது. அதன் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.. சுருக்கமாக சொல்வதென்றால் 'தூங்கிட்டிருக்கும் பூனைய சுறண்டி எழுப்பாதீங்க!'
பூனைகளுக்கு உணவு ஊட்டுவதோ, கைகளில் தூக்கி கொஞ்சுவதோ... ஏதேனும் கட்டாயப்படுத்துவதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
புகைப்படங்களோ செல்ஃபியோ எடுக்க அனுமதி உண்டு. ஆனால் கண்டிப்பாக 'ப்ளாஷ்' கூடாது.
கொழு கொழு பூனைகளை, அதன் போக்கிலே விட்டு ரசித்துவிட்டு... சுவையான கஃபேயும் அருந்திவிட்டு வர, அட்டகாசமான இடம் இது!!
Le Cafe des Chats,
16 rue Michel le Comte | 3rd District, 75003.