பிரான்சில் ஒரு வெள்ளை மலை!!
30 பங்குனி 2018 வெள்ளி 13:30 | பார்வைகள் : 18434
பிரெஞ்சு தேசத்தில் எண்ணற்ற மலைகளும் மலைத்தொடர்களும் உள்ளது. அதில் மிக பிரதானமாக மலை வெள்ளை மலை எனப்படும் Mont Blanc ஆகும்.
பிரான்சையும் இத்தாலியையும் இணைத்து நடுவே வெண்மை மை பூசி கம்பீரமாய் நிற்கின்றது.
எத்தனையோ மலைகள் இருந்தாலும், இந்த மலை கொஞ்சம் 'ஸ்பெஷல்!'. காரணம் இதுவே பிரான்சின் மிக உயரமான மலையும், ஐரோப்பாவின் மிக உயரமான மலையுமாகும்.
கடல் மட்டத்தில் இருந்து 4,808.7 மீட்டர்கள் உயரம் கொண்டது இந்த மலை. உலகின் 11 ஆவது மிக உயரமான மலை.
பிரச்சனை என்னவென்றால்... இந்த மலை இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதால், இத்தாலி நாட்டினரும் இந்த மலைக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இத்தாலியில் இதை Monte Bianco என்கின்றார்கள். அர்த்தம் என்னவோ ஒன்றுதான்.
மலை ஏறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. பலநூறு மலையேற்றவாதிகள் மலையில் ஏறுகின்றனர். வருடத்துக்கு குறைந்தது நூறு பேராவது இறக்கின்றனர் என்பது தான் சோகம்.
முன்னதாக, வெள்ளை வெளேர் மலை என்பதால் விமான விபத்துக்கள் ஏகபோகமாய் இடம்பெற்றிருந்தன. இப்போது விமான போக்குவரத்துக்கள் முற்றாக தடை!!
இந்த பதிவை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு -14° குளிர் நிலவிக்கொண்டிருக்கின்றது.